நெருக்கடியான இடத்தில் பள்ளி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவ–மாணவிகள் போராட்டம்


நெருக்கடியான இடத்தில் பள்ளி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவ–மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2017 4:15 AM IST (Updated: 16 Dec 2017 2:14 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே நெருக்கடியான இடத்தில் பள்ளி கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து மாணவ–மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே மேல்ஒட்டிவாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த ஆண்டு நடுநிலைப்பள்ளியாக இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யதுள்ளது. இதையொட்டி அதே இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பூஜை போடப்பட்டது.

மேலும் இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டதால் தற்போது உள்ள இடம் போதாது என்றும், அருகில் உள்ள 1 ஏக்கர் 84 சென்ட் பஞ்சமி நிலத்தில் புதிய உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் தீர்மானம் வழங்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அந்த இடத்தை பார்வையிட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு உறுதியளித்தார். இந்த நிலையில் பழைய கட்டிடத்தை இடித்து விட்டு நெருக்கடியான இடத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ–மாணவிகள், கிராம பொதுமக்கள், மகளிர் குழுவினர் பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில் காஞ்சீபுரம் தாசில்தார் நாகராஜன் மற்றும் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து பள்ளி மாணவ–மாணவிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி புதிய இடத்தில் பள்ளி கட்டிடம் கட்ட அனுமதிக்கப்படும் என்று கூறியதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story