நெல்லையில் லாட்ஜ் உரிமையாளர் வீட்டை உடைத்து வைர வளையல்கள்–பணம் கொள்ளை


நெல்லையில் லாட்ஜ் உரிமையாளர் வீட்டை உடைத்து வைர வளையல்கள்–பணம் கொள்ளை
x
தினத்தந்தி 17 Dec 2017 2:30 AM IST (Updated: 16 Dec 2017 6:20 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில், லாட்ஜ் உரிமையாளர் வீட்டை உடைத்து வைர வளையல்கள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை,

நெல்லையில், லாட்ஜ் உரிமையாளர் வீட்டை உடைத்து வைர வளையல்கள், ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

லாட்ஜ் உரிமையாளர்

நெல்லை சந்திப்பு தெற்கு பாலபாக்கியா நகர் 5–வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்நாராயணன் (வயது 52). இவர் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே ஓட்டல் மற்றும் லாட்ஜ் வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டு இருந்தார்.

நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த பீரோவை நைசாக உடைத்து அதில் இருந்த ஒரு ஜோடி வைர வளையல்கள், ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் ஒரு செல்போனை கொள்ளையடித்து சென்று விட்டனர். காலையில் தூங்கி எழுந்த ராஜ்நாராயணன் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த வைர வளையல்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கொள்ளை போன வைர வளையல்களின் மதிப்பு ரூ.7½ லட்சம் என்று தெரிகிறது.

மற்றொரு வீட்டிலும் கைவரிசை

அதே பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவர் முரளி. இவர் வீட்டிலும் மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து புகுந்தனர். அவர்கள் அங்கு வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம், ஒரு கைக்கடிகாரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்

போலீசார் விசாரணை

தகவல் அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர்(குற்றப்பிரிவு) பெரோஸ்கான் அப்துல்லா, உதவி கமி‌ஷனர் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீடுகளில் பதிவாகி இருந்த தடயங்களை விரல் ரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிப்படை

நெல்லையில் ஒரேநாள் இரவில் 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் நெல்லை மாநகர பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

--–

தொடர் கொள்ளை சம்பவங்கள் தடுக்கப்படுமா?

நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தில் பழக்கடை அதிபர் செல்லப்பா வீட்டில் பட்டப்பகலில் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த அவரது மருமகள் காந்திமதியை அரிவாளால் வெட்டியும், கட்டிப்போட்டு விட்டும் வீட்டில் இருந்த 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். கடந்த வாரம் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே வங்கி காசாளர் சிவசாமி வீட்டில் 57 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேட்டையில் கோவில் உண்டியல் திருடப்பட்டது. கம்பாநதி காமாட்சியம்மன் கோவிலில் கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் நகைகள் தப்பியது. நேற்று முன்தினம் இரவு நெல்லை சந்திப்பு பாலபாக்கியா நகரில் லாட்ஜ் உரிமையாளர் ராஜ்நாராயணன் வீட்டிலும், அதே பகுதியில் உள்ள முரளி என்பவர் வீட்டிலும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இந்த தொடர் கொள்ளை சம்பவங்களை தடுக்க காவல்துறை அதிகாரிகள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story