பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த பயன்படும் ரசாயன மருந்துகளை பாதுகாப்பாக கையாள வேண்டும்
பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த பயன்படும் ரசாயன மருந்துகளை விவசாயிகள் பாதுகாப்பாக கையாள வேண்டும் என்று சிவகங்கை வேளாண்மை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்த ரசாயன மருந்துகளை கையாளும்போது மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அத்துடன் கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் ரசாயன மருந்துகளால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கலாம். பொதுவாக பூச்சிக்கொல்லி மருந்து தேவைப்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியவுடன் அதன்மேல் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு லேபிளில் உள்ள வழிமுறைகளை கவனமாக விவசாயிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஆட்களையே பயன்படுத்த வேண்டும். மருந்து தெளிப்பு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பாதுகாப்பு உடைகள், ரப்பர் காலணிகள், கைகளுக்கு பாதுகாப்பு உறைகள் ஆகிய பாதுகாப்பு கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும். மேலும் மருந்து தெளிப்பவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுதல் வேண்டும்.
மருந்து தெளிக்கும் தெளிப்பான்களை பரிசோதித்து கசிவு ஏதேனும் இருந்தால் சரி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மருந்து தெளிக்கும் இடத்திற்கு அருகில் சுத்தமான நீர் மற்றும் சோப்புக்கட்டி துண்டு ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமாக தற்செயலாக கைகளிலோ அல்லது உடலிலோ மருந்து பட்டுவிட்டால் உடனடியாக சுத்தம் செய்ய முடியும். காலியான பூச்சி மருந்து புட்டி மற்றும் கலன்களை நீர்நிலைகளிலோ, வயலிலோ வீசி எறிவதை தவிர்க்க வேண்டும். மேலும் அவற்றை வீட்டில் பயன்படுத்துவதையும் தவிர்த்து மண்ணில் புதைக்க வேண்டும். மருந்து தெளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உணவு அருந்தவோ, குடிநீர் குடிக்கவோ கூடாது. மருந்து கலக்கும் போது எப்போதும் காற்று வீசும் திசையிலேயே நின்று கலக்க வேண்டும்.
பரிந்துரை செய்யப்பட்ட சரியான அளவிலே பயிர்களுக்கு மருந்து அடிக்க வேண்டும். அருகில் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் பயிர்கள், நீர் நிலைகள், மேச்சல் நிலங்கள் இருந்தால் மருந்து அடிக்கும் மருந்து அவற்றை பாதிக்காத வண்ணம் கவனமாக செயல்பட வேண்டும். மருந்து அடித்தவுடன் சோப்பு போட்டு குளித்து விட்டு, ஆடைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.