விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் போலீசார் நடவடிக்கை
விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை போலீசார் அதிரடியாக அகற்றினார்கள்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகரில் உள்ள சாலையோரங்களில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் மீண்டும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க நகராட்சி நிர்வாகமும், காவல்துறையினரும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நடைபாதை வியாபாரிகள் பின்பற்றாமல் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனையடுத்து வணிகர் சங்கத்தினர், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்றும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகாமல் இருக்க தினமும் கண்காணிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கும், காவல்துறையினருக்கும் ஐகோர்ட்டு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதன் அடிப்படையில் நேற்று காலை விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதியில் இருந்த நடைபாதை கடைகளை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், மகேஷ், சப்–இன்ஸ்பெக்டர்கள் வசந்த், விஸ்வநாத் மற்றும் போலீசார் அதிரடியாக அகற்றினார்கள்.
தொடர்ந்து, அதே பகுதியில் சில காய்கறி கடைகள், பழக்கடைகளின் வியாபாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். அந்த ஆக்கிரமிப்புகளையும் போலீசார் அகற்றினார்கள்.
இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில வியாபாரிகள், போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அப்போது ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.
நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த பணி பகல் 12.30 மணி வரை நடந்தது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதற்கு பிறகு எம்.ஜி. சாலை, பாகர்ஷா வீதிகள் விசாலமாக காட்சியளித்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும். மீண்டும் யாரேனும் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினார்கள். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு போலீசார்களுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் போதுமான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் போலீசார் விரைந்து செயல்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.