சோலார் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
வத்தலக்குண்டு அருகே சோலார் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
வத்தலக்குண்டு,
சூரிய ஒளி சக்தி (சோலார்) மூலம் மின்சாரம் தயாரிக்க தமிழக அரசிடம் ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக தேனி மாவட்டம் குள்ளபுரத்தில் இருந்து சாத்தாகோவில்பட்டி வழியாக, வத்தலக்குண்டு அருகே உள்ள எழுவனம்பட்டியில் சோலார் மின்கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் எழுவனம்பட்டியில் சோலார் மின்கோபுரம் அமைக்கும் இடத்தில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அங்கு மின்கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்குள்ள தனியார் நிலத்தில் பயிரிட்டிருந்த சோளப்பயிர்களை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி விட்டு மின்கோபுரம் அமைப்பதற்கான தளத்தை தனியார் நிறுவத்தினர் அமைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி விவசாயிகள் அங்கு திரண்டனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் நிலவியது.
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் 50–க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக கோர்ட்டுக்கு சென்று தீர்வு காண்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொக்லைன் எந்திரமும் மீட்கப்பட்டது. விவசாயிகளின் போராட்டம் காரணமாக வத்தலக்குண்டுவில் பரபரப்பு ஏற்பட்டது.