‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்டு மாயமான மீனவர்களை மீட்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்டு மாயமான மீனவர்களை மீட்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2017 4:15 AM IST (Updated: 17 Dec 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்டு மாயமான மீனவர்களை மீட்க கோரி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்டு கடலில் மாயமான 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க கோரி பா.ம.க. சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில துணைபொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில், உழவர் பேரியக்க மாநில தலைவர் வேலுச்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர்.

மாநில துணைத்தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், அரசாங்கம், மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், சார்பு அமைப்பு நிர்வாகிகள் பெரியசாமி, வணங்காமுடி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

‘ஒகி‘ புயலில் சிக்கி உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 98 மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

புயலில் சிக்கி கடலில் மாயமாகி இதுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ள 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கான நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Next Story