சேலத்தில் விஷம் குடித்து அண்ணன், அண்ணி சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக தம்பி கைது


சேலத்தில் விஷம் குடித்து அண்ணன், அண்ணி சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக தம்பி கைது
x
தினத்தந்தி 17 Dec 2017 4:27 AM IST (Updated: 17 Dec 2017 4:27 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் விஷம் குடித்து அண்ணன், அண்ணி இறந்த வழக்கில், அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக தம்பி கைது செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் குகை நரசிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 55). இவருடைய மனைவி சந்திரகலா (50). இத்தம்பதியினர் கடந்த 14-ந் தேதி இரவு வீட்டின் கதவை உள்புறமாக தாழிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

தகவல் அறிந்ததும் செவ்வாய்பேட்டை போலீசார் விரைந்து சென்று, கதவை திறந்து 2 உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் இருவரது உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூரூவில் வசித்த அவர்களது மகன் அருண்பிரகாஷ் சேலம் வந்து விட்டதால், இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பாதுகாப்பாக சேலம் அரசு ஆஸ்பத்திரியின் பிரேத கூடத்தில் வைக்கப்பட்டு உள்ளது. தாய்லாந்து நாட்டில் வசிக்கும் மற்றொரு மகன் ஜெய்கார்த்திக் சேலம் வந்ததும் உடல்களை போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.

முன்னதாக நடராஜன் தற்கொலை செய்வதற்கு முன் எழுதி வைத்திருந்த 4 பக்கங்கள் கொண்ட உருக்கமான கடிதமும், சி.டி. ஒன்று, 2 பென்டிரைவ் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த கடிதத்தில் எங்கள் தற்கொலைக்கு தம்பி விஜயராகவன், அவரது மனைவி சம்பூர்ணம், மகன் நிர்மல்குமார், மகள் சுகன்யா ஆகிய 4 பேரும்தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தையே புகாராக ஏற்றுக்கொண்டு செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி விசாரணை நடத்தினார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நடராஜன் வசித்து வந்த வீட்டின் முதல் மாடியில் அவருடைய தம்பி விஜயராகவன் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டை நடராஜனின் மகன்கள் அருண்பிரகாஷ், ஜெய்கார்த்திக் ஆகியோர் பெயரில் அவருடைய தந்தை சோமசுந்தரம் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் வீட்டின் மேல்மாடியில் குடியிருந்த தம்பி விஜயராகவனை வீட்டை காலி செய்யுமாறு நடராஜன் கூறி வந்துள்ளார். இதற்கு விஜயராகவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

ரூ.1 கோடி தந்தால்தான் வீட்டை காலி செய்வேன், இல்லையெனில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வீட்டை காலி செய்யமாட்டேன். உங்களையும் சும்மா விடமாட்டேன் என மிரட்டல் விடுத்து வந்துள்ளார். மேலும் விஜயராகவனின் குடும்பத்தினர் சந்திரகலாவை அடிக்கடி தகாத வார்த்தையால் திட்டி மிரட்டி உள்ளனர். இதனால் நடராஜன், சந்திரகலா ஆகியோர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளனர்.

மேலும் அந்த கடிதத்தில் பேரக்குழந்தைகளை கொஞ்ச வேண்டிய காலத்தில் நாங்கள் இருவரும் அது முடியாமல் இந்த முடிவை எடுக்க வேண்டியதாயிற்று“ என்றும் எழுதப்பட்டு இருந்தது. அத்துடன் இந்த அவமானத்தை தாங்கி கொண்டு வெளியில் உற்றார், உறவினர்கள் முகத்தில் விழிப்பது எப்படி? என்ற மனவேதனையையும் அவர்கள் அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதியிருந்தனர்.

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் அண்ணன் நடராஜன், அண்ணி சந்திரகலா தற்கொலைக்கு தம்பி விஜயராகவன் (50)தான் காரணம் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு தூண்டியதாக விஜயராகவனை நேற்று இரவு கைது செய்தார்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story