வருகிற சட்டசபை தேர்தலுக்கு பிறகு போட்டியிட மாட்டேன் சித்தராமையா அறிவிப்பு
அரசியலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என்றும், வருகிற சட்டசபை தேர்தலுக்கு பிறகு நான் போட்டியிட மாட்டேன் என்றும் முதல்–மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார்.
பெங்களூரு,
ராய்ச்சூரில் நேற்று முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
எனக்கு வயதாகி விட்டது. கடந்த முறை தேர்தலில் போட்டியிடும் போது, இதுதான் எனது கடைசி தேர்தல் என்று கூறி இருந்தேன். ஆனால் மதவாத அரசியலில் பா.ஜனதாவினர் ஈடுபட்டதாலும், பா.ஜனதாவினர் ஆட்சியை பிடித்து விடக்கூடாது என்பதற்காகவும் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன். அதே நேரத்தில் கட்சி மேலிடம் வற்புறுத்தியதாலும் 2018–ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறேன். இதுதான் எனது கடைசி தேர்தல். இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன். அரசியலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை.
வருணா தொகுதியில் தான் போட்டியிட முடிவு செய்திருந்தேன். ஆனால் கடைசி தேர்தல் என்பதால் சாமுண்டீசுவரி தொகுதியில் தான் போட்டியிடுவேன். எனது அரசியல் வாழ்க்கையில் திருப்பத்தை கொடுத்தது சாமுண்டீசுவரி தொகுதி ஆகும். எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவேன்.
இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.