8 கடைகளை உடைத்து கைவரிசை: வடமாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது


8 கடைகளை உடைத்து கைவரிசை: வடமாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2017 4:30 AM IST (Updated: 18 Dec 2017 12:35 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் அடுத்தடுத்து 8 கடைகளின் கதவுகளை உடைத்து பணத்தை கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை,

கோவை ராஜவீதியில் உள்ள ஒரு வணிகவளாகத்தில் கடந்த 6-ந் தேதி 8 கடைகளின் கதவுகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவை வெறைட்டிஹால் ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் கொள்ளை போன 8 கடைகளும் ராஜஸ்தான் மாநில வியாபாரிகளுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அந்த வணிக வளாகத்தில் இருந்த பேன்சி கடை, கைக்கெடிகார கடை, எலக்ட்ரிக்கல் கடை உள்பட பல்வேறு கடைகள் இருந்தன. அந்த கடைகளின் கதவுகளை(ஷட்டர்) உடைத்து அதில் இருந்த ரூ.90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை.

ஒரே நாளில் 8 கடைகளின் கதவுகளை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் குறித்து வெறைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த வணிக வளாகத்துக்கு வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவங்கள் பதிவாகியிருந்தது. அதில் கொள்ளையர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக போலீஸ் கமிஷனர் பெரியய்யா உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பெருமாள் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, துரை சிங்கம், அய்யாசாமி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கொள்ளையர்கள் கோவை டவுன்ஹால் பகுதியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொள்ளையர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்கள் விவரம் வருமாறு:-

1. ஜிதேந்திரகுமார்(வயது 22), மடோலா கிராமம், ஜாலூர் மாவட்டம். 2. சுரேந்திரசிங்(23), மஜால் கிராமம், பார்மெர் மாவட்டம். 3. அர்ஜூன்ராம்(25), பதானி கிராமம், ஜாலூர் மாவட்டம், 4. ஜஸ்வந்த் சிங்(24), சிந்தாரி கிராமம், பார்மெர் மாவட்டம். இவர்கள் 4 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. கைது செய்யப்பட்ட 4 பேரும் நண்பர்கள். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கடைகளில் வேலை செய்து வந்தனர். அப்போது அங்கிருந்த கடைகளில் திருடியதாக பெங்களூரு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் 6-ந் தேதி கோவை வந்து 8 கடைகளின் கதவுகளை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்களிடமிருந்து ரூ.80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் கோவையில் வடமாநிலம் குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் எங்கெங்கு கடை வைத்துள்ளனர் என்று பார்த்து அந்த கடைகளில் மட்டும் கொள்ளையடித்துள்ளது போலீசாருக்கு வியப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கொள்ளையர்களிடம் விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்களின் கடைகளில் பணம் அதிகமாக இருக்கும் என்றும் அவர்கள் போலீசில் புகார் செய்ய மாட்டார்கள் என்ற தைரியத்தில் அந்த கடைகளில் புகுந்து கொள்ளையடித்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story