பூந்தமல்லி பகுதியில் செயல்படாத சிக்னல்களால் போக்குவரத்து நெரிசல்
பூந்தமல்லி பகுதியில் செயல்படாத சிக்னல்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பூந்தமல்லி,
பூந்தமல்லியில் இருந்து சென்னை பிராட்வே, கோயம்பேடு என சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கும், பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தினந்தோறும் காலை முதல் இரவு வரை ஆயிரக்கணக்கான பயணிகள் பூந்தமல்லிக்கு வந்து செல்கின்றனர்.
பூந்தமல்லியை மையப்படுத்தி அதிக அளவில் தனியார் கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதே இதற்கு காரணம். மேலும் பூந்தமல்லி–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, டிரங்க் ரோடு, மவுண்ட்–பூந்தமல்லி சாலை, சென்னீர்குப்பம்–ஆவடி சாலை என சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் இங்கு உள்ளன.
இந்த சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பூந்தமல்லி பகுதியில் முக்கிய இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் அவற்றை முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது பெரும்பாலான சிக்னல்கள் பழுதாகி பல மாதங்களாக செயல்படாமல் சாலையில் வெறும் காட்சி பொருளாகவே உள்ளன.
குறிப்பாக போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் குமணன்சாவடி மற்றும் அங்கிருந்து மதுரவாயல், கிண்டி செல்லும் சாலை, கரையான்சாவடி மற்றும் அங்கிருந்து ஆவடி செல்லும் சாலை, சென்னீர்குப்பம் கூட்டு சாலை ஆகிய முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு உள்ள சிக்னல்கள் எதுவும் இயங்கவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப வாகனங்களில் சென்று வருகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துகளும் ஏற்படுகிறது.
இதனால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நிற்பதால் பொதுமக்கள் குறித்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர். இது போன்ற நேரங்களில் சாலைகளை கடந்து செல்ல பொதுமக்கள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
போக்குவரத்து போலீசாரும் சில நேரங்களில் பணியில் இருப்பது இல்லை. இருந்தாலும் இவற்றை கண்டுகொள்வது இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இவற்றை தவிர்க்க பூந்தமல்லி பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் நீண்ட நாட்களாக செயல்படாமல் உள்ள போக்குவரத்து சிக்னல்களை சீரமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.