பண்ருட்டி அருகே டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது; உடல் நசுங்கி டிரைவர் பலி


பண்ருட்டி அருகே டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது; உடல் நசுங்கி டிரைவர் பலி
x
தினத்தந்தி 18 Dec 2017 4:22 AM IST (Updated: 18 Dec 2017 4:22 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை ஏற்றி வந்த டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி பலியானார்.

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள செம்மேடு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். விவசாயி. இவருடைய விளைநிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில், நேற்று நெல் அறுவடை செய்யப்பட்டது.

எந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தை சேர்ந்த டிரைவரான சங்கர்(வயது 45) என்பவர் டிராக்டர் டிப்பரில் ஏற்றிக்கொண்டு களத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது மேடான பகுதியில் சங்கர், டிராக்டரை ஓட்டினார். அந்த சமயத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் மேற்கூரையின் இடிபாடுகளுக்குள் சங்கர் சிக்கிக்கொண்டார். இதை பார்த்த அப்பகுதியினர் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். டிராக்டரை அப்புறப்படுத்தி சங்கரை மீட்டனர். அதற்குள் சங்கர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story