பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள்?
பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று ஆர்.டி.ஐ. சட்டம் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சாதாரண சிறையில் அடைக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறி வந்தனர். இந்த நிலையில் சசிகலா, இளவரசிக்கு சிறையில் சட்ட விதிகளை மீறி சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கி இருக்கிறார் என்றும் டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
மேலும் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சொகுசு வசதிகள் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியானது. இதையடுத்து சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து சொகுசு வசதிகளும் ரத்து செய்யப்பட்டன. கர்நாடக அரசு அமைத்த விசாரணை கமிஷனும், சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் சசிகலாவுக்கு தற்போது சிறையில் என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஆர்.டி.ஐ. (தகவல் அறியும் உரிமை சட்டம்) சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, சிறை நிர்வாகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் விவரங்களை பெற்றார். பெங்களூரு சிறை நிர்வாகம் வழங்கியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–சிறையில் சசிகலாவுக்கு சில்வர் தட்டு–1, சில்வர் டம்ளர்–1, சில்வர் பாத்திரம் வைக்கும் ஸ்டேண்டு–1, சில்வர் சொம்பு–1, தரைவிரிப்பு–1, போர்வை–2, கம்பளி–1, வெள்ளை புடவை–2, வெள்ளை ரவிக்கை–2, வெள்ளை பாவாடை–2 ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. அவருடைய சொந்த பொருட்கள் எதுவும் பயன்படுத்த அனுமதிக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.