கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி,
தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் தலித்ராயன், தென்மண்டல செயலாளர் அருந்தமிழரசு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, கந்துவட்டிக்கு எதிராக சாட்சி சொன்ன பெண் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். இதனால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பிறகு அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாளிடம் மனு அளித்தனர்.
மனு அளித்தவர்கள் கூறுகையில், ‘கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி தொடர்பான புகாரில் ஒரு பெண் சாட்சி சொன்னார். அந்த பெண் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, கந்துவட்டிக்கு எதிராக புகார் கொடுக்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்றனர்.