சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் மகனிடம் ரூ.1½ கோடி மோசடி
ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மகனிடம், சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1½ கோடி மோசடி செய்த கொல்கத்தாவை சேர்ந்த 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி,
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ராமராஜ். இவர், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 30). இவர், எம்.பி.ஏ. படித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த மே மாதம் இவருக்கு ஒரு தனியார் நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் உதவி நிர்வாக அதிகாரி பதவிக்கான வேலை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளது. ஆன்–லைன் மூலம் கிடைத்த இந்த தகவலை நம்பி, வினோத்குமாரும் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல முடிவு செய்தார்.
தொடர்ந்து அந்த நிறுவனத்தை ஆன்–லைன் மூலம் தொடர்பு கொண்ட போது, வேலை வாங்கிக் கொடுப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். அவரும், பணம் அனுப்பி உள்ளார். ஆனால், அந்த பணம் தங்களின் வங்கிக் கணக்கில் ஏறவில்லை என்றும், மீண்டும் பணம் அனுப்பி வைக்குமாறும் கூறியுள்ளனர்.
இதனை நம்பி சிங்கப்பூரில் கிடைக்கும் வேலைக்காக பல தவணையாக ரூ.1 கோடியே 48 லட்சத்து 93 ஆயிரத்து 450–ஐ ஆன்–லைன் மூலமாக அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சொன்ன வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். ஆனால், வேலை வாங்கிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர்.
இதையடுத்து, தன்னிடம் மோசடி செய்த கொல்கத்தாவை சேர்ந்த எஸ்.கே. இண்டர்நேஷனல் குரூப் நிறுவனத்தின் ஆவண உதவியாளர் சமீர்சவுத்ரி, செயல் மேலாளர் கபீர்சர்மா, நிர்வாக இயக்குனர் ஆரவ்சிங்கானியா ஆகிய 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம், வினோத்குமார் புகார் செய்தார்.
அதன்பேரில் நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மோசடி சம்பவம் தொடர்பாக சமீர்சவுத்ரி, கபீர்சர்மா, ஆரவ்சிங்கானியா ஆகிய 3 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஆன்–லைன் மூலமே இந்த தொடர்பு ஏற்பட்டு உள்ளது. ஒவ்வொரு முறையும் பணம் அனுப்பும் போதும், தங்களின் வங்கிக் கணக்கில் ஏறவில்லை என்றும், சிங்கப்பூரில் வினோத்குமாருக்காக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு பணம் சென்று விட்டதாகவும் கூறி வந்துள்ளனர். அதை நம்பி, தொடர்ந்து பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக கொல்கத்தாவுக்கு தனிப்படை போலீசார் செல்ல உள்ளனர்’ என்றனர்.