திருவொற்றியூரில் ஆசிரியர் திட்டியதால் 7–ம் வகுப்பு மாணவன் தற்கொலை


திருவொற்றியூரில் ஆசிரியர் திட்டியதால் 7–ம் வகுப்பு மாணவன் தற்கொலை
x
தினத்தந்தி 19 Dec 2017 12:15 AM GMT (Updated: 18 Dec 2017 8:02 PM GMT)

மதிப்பெண் குறைவாக எடுத்ததற்காக ஆசிரியர் திட்டியதால் 7–ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் காலடிப்பேட்டை வரதராஜன் தெருவில் வசித்து வருபவர் எழிலன். இவர் இரும்பு தொழிற்சாலையில்  வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் விஸ்வசாய் (வயது 12). இவன் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தான்.

மாணவன் விஸ்வசாய் பருவ தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக தெரிகிறது. இதற்கு ஆசிரியர்கள் மாணவனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டான்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டின் 2–வது மாடிக்கு சென்ற விஸ்வசாய் அங்கு உள்ள குடிநீர் தொட்டியில் இருக்கும் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இதையடுத்து, மாடிக்கு விளையாட சென்ற சிறுவர்கள் அங்கு சிறுவன் விஸ்வசாய் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை பார்த்து, அவனது பெற்றோரிடம் தெரியப்படுத்தினர்.

பின்னர் இதுகுறித்து திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story