முதுமலையில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது


முதுமலையில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 18 Dec 2017 9:45 PM GMT (Updated: 18 Dec 2017 8:22 PM GMT)

முதுமலையில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல் முறையாக ‘மொபைல் ஆப்’ மூலம் தகவல் பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மசினகுடி,

முதுமலை புலிகள் காப்பகம் 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகத்தில் 6 மாதங்களுக்கு ஒருமுறை புலிகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான உணவு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான முதற்கட்ட கணக்கெடுப்பு நடந்து முடிந்த நிலையில் 2–ம் கட்ட கணக்கெடுப்பு பணி நேற்று காலை தொடங்கியது. முன்னதாக இந்த கணக்கெடுப்பிற்காக கள பணியில் ஈடுபடு பவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள அரங்கில் நடைபெற்றது. பயிற்சி முகாமை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் சீனிவாச ரெட்டி, துணை கள இயக்குனர் சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முதன் முறையாக ‘மொபைல் ஆப்’ மூலம் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் 36 குழுக்களை சேர்ந்த 180 பேருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. கணக்கெடுப்பில் பங்கேற்கும் தன்னார்வலர்கள் தங்களிடம் உள்ள செல்போனை பயன்படுத்தி வனப்பகுதிக்குள் செல்லும் போதும், புலிகள் உள்ளிட்ட ஊன் உண்ணிகளை பார்க்கும் போதும் எவ்வாறு தகவல்களை பதிவு செய்வது, அதே போல டேட்டா சீட் முறையில் எவ்வாறு கணக்கெடுப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை தன்னார்வலர்கள் ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து வனப்பகுதிக்குள் சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:–

புலிகளை துல்லியமாக கணக்கெடுக்கவே தமிழகத்தில் முதல் முறையாக ‘மொபைல் ஆப்’ மூலம் தகவல் பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற 36 குழுக்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். ஒவ்வொரு குழுவினரும் காலை முதல் மாலை வரை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

ஒவ்வொரு குழுவிலும் ஒரு வனத்துறை ஊழியர், வேட்டைத்தடுப்பு காவலர், தன்னார்வலர், பயிற்சி வனச்சரகர் என 5 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் வருகிற 22–ந்தேதி மாலை வரை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 2 ஸ்மார்ட் செல்போன்கள் உள்ளன. அத்துடன் ஜி.பி.எஸ்., பைனாகுலர் போன்ற கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் நேரடி மற்றும் மறைமுகம் என பல்வேறு முறைகளில் இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story