பாகூர் கிராமத்தில் பாசன வாய்க்காலைகளை தூர்வாராததால் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது


பாகூர் கிராமத்தில் பாசன வாய்க்காலைகளை தூர்வாராததால் மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது
x
தினத்தந்தி 18 Dec 2017 9:30 PM GMT (Updated: 18 Dec 2017 8:44 PM GMT)

பாகூர் கிராமத்தில் பாசன வாய்க்களை சரியாக தூர்வாராததால் இந்த ஆண்டு பெய்த மழைநீர் வீணாக கடலில் கலக்கிறது.

பாகூர்,

புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமாக பாகூர் கிராமம் இருந்து வருகிறது. புதுவையில் மற்ற கிராமத்தை விட இங்குதான் அதிகமான ஏரிகள், குளங்கள் மற்றும் பாசன வாய்க்கால் நிறைந்துள்ளது. இவைகளை பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் சேமிக்கும் விதமாக புதுவை அரசு பொதுப்பணித்துறை மூலம் தூர்வாரப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்தது. பாகூர் சுற்றியுள்ள ஏரிகள், குளங்கள் போன்றவை நிரம்பி வழிந்தன. ஆனால் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படாததால் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு விளைநிலம், வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியது. இதனால் மக்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனை காரணம் காட்டி மழைநீர் தேங்கிய வாய்க்கால்கள் அவசர கதியாக பெயரளவில் தூர்வாரப்பட்டன.

பாகூரில் இருந்து பரிக்கல்பட்டு ஏரிக்கு செல்லும் வாய்க்கால் சுமார் 10 மீட்டர் அகலம் கொண்டது. இந்த வாய்க்கால் மழை காலத்தில் கிடைக்கும் தண்ணீர் மூலம் விவசாயிகள் சுமார் 500 ஏக்கருக்கு பாசனத்திற்காக பயன்படுத்தி வந்தனர். ஆனால் சில வருடங்களாக இந்த வாய்க்காலை முறையாக தூர்வாரவில்லை.

இதனால் கடந்த ஆண்டு பெய்த மழையில் சுமார் 200 ஏக்கருக்கு பயிர்களை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டும் வாய்க்காலை தூர்வாராததால் கடந்த மாதம் பெய்த மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது. நாளுக்கு நாள் வாய்க்காலின் அகலம் சுருங்கிக்கொண்டே போகிறது.

750 மீட்டர் தூரம் கொண்ட சித்தேரி மதகு வாய்க்காலை 250 மீட்டர் தூரம் வரை மட்டுமே தூர்வாரப்பட்டு உள்ளது. பாகூர் பகுதியில் மட்டம் பல பாசன வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது. எனவே புதுவை அரசு பாசன வாய்க்காலை முறையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story