தடுப்பணையை உடைத்த மர்ம ஆசாமிகள் தண்ணீர் வீணாகியதால் விவசாயிகள் கவலை


தடுப்பணையை உடைத்த மர்ம ஆசாமிகள் தண்ணீர் வீணாகியதால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 19 Dec 2017 4:15 AM IST (Updated: 19 Dec 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

போச்சம்பள்ளி அருகே தடுப்பணையை மர்ம ஆசாமிகள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் வீணாகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

போச்சம்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பாரூர் பெரிய ஏரியில் இருந்து கோணனூர் ஏரி, திருவயலூர் கால்வாய் வழியாக சமத்துவபுரம் அருகே 7-ம் அணி ஆற்று பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டைக்கு தண்ணீர் செல்கிறது. இந்த கசிவுநீர் குட்டை அருகே சிறிய தடுப்பணை கட்டப்பட்டு அதில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் இந்த தடுப்பணையில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக மழை பெய்ததால் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உள்ளன.

அதன்படி பாரூர் ஏரியும் நிரம்பி அதில் இருந்து 7-ம் அணி ஆற்று பகுதியில் உள்ள தடுப்பணைக்கு தண்ணீர் வந்தது. இதனால் இங்கு தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதனால் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்த தண்ணீரால் சுற்று வட்டார பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது. மேலும் சிறுவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வந்தனர். சிலர் மீன் பிடித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம ஆசாமிகள் சிலர் இந்த சிறிய தடுப்பணையில் உள்ள கற்களை உடைத்துள்ளனர். இதன் காரணமாக தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் அனைத்தும் வெளியேறியது. இதனால் தடுப்பணையில் ஆங்காங்கே தண்ணீர் வெறும் குட்டை போல காட்சியளிக்கிறது.

இதைப் பார்த்து அப்பகுதி மக்களும், விவசாயிகளும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தண்ணீர் வீணாக வெளியேறியதை கண்டு கவலையடைந்தனர். தடுப்பணையை உடைத்த மர்ம ஆசாமிகள் யார்?, எதற்காக உடைத்தார்கள்? என்பது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story