குஜராத் தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது சித்தராமையா பேட்டி


குஜராத் தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 19 Dec 2017 4:00 AM IST (Updated: 19 Dec 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

குஜராத் தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

குஜராத், இமாசலபிரதேச மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுபற்றி முதல்-மந்திரி சித்தராமையா யாதகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

குஜராத், இமாசலபிரதேச மாநிலங்களில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கும், அந்த மாநிலங்களின் பா.ஜனதாவுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இமாசலபிரதேச மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அதிருப்தி இருந்தது உண்மை. அதனால் அங்கு பா.ஜனதா வெற்றி பெறும் என்று எங்களுக்கு முன்கூட்டியே தெரியும்.

எதிர்ப்புகள் இருந்தன

ஆனால் குஜராத்தில் அங்குள்ள பா.ஜனதா அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்புகள் இருந்தன. பிரதமர் மோடி மற்றும் பா.ஜனதா தலைவர் ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத் ஆகும். அங்கு மோடி 50-க்கும் மேற்பட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களை நடத்தினார். இது அவர்களுக்கு உதவி இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்று இருக்கிறது.

இதற்கு காரணமான எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இது ராகுல் காந்தியின் வெற்றி பயணத்தின் முதல்படி. கர்நாடகத்தில் முழு வெற்றிக்கனியை பறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பரிசாக வழங்குவோம்.

குஜராத் மாநில வெற்றி- தோல்வி கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அங்குள்ள அரசியலுக்கும், கர்நாடகத்தில் உள்ள அரசியலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளன. கர்நாடகத்தில் காங்கிரஸ் அடிமட்டத்தில் வலுவாக உள்ளது.

உள்ளூர் பிரச்சினைகளே...

இதுபற்றி நான் ஏற்கனவே பலமுறை கூறி இருக்கிறேன். சட்டசபை தேர்தலில் உள்ளூர் பிரச்சினைகளே முக்கிய இடம் பிடிக்கின்றன. அவற்றின் அடிப்படையில் தான் தேர்தல் நடக்கிறது. நாங்களும் சமீபத்தில் 2 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றோம். அந்த தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் சொல்ல முடியுமா?.

எனக்கு தெரிந்தவரையில் குஜராத் மாநிலத்தில் பா.ஜனதா வெற்றிக்கு 3 காரணங்கள் உள்ளன. ஒன்று மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சியில் இருக்கிறது. 2-வது பிரதமர் மற்றும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள். 3-வது பிரதமர் மோடி பிரசாரம் செய்தபோது, நான் இந்த மண்ணின் மகன், என்னை காப்பாற்றுங்கள் என்று மக்களிடம் கேட்டார். இவை தான் அந்த கட்சியை வெற்றி பெற வைத்துள்ளன.

பா.ஜனதாவினர் திசை திருப்பினர்

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் எங்கள் கட்சியை விட்டு விலகினார். அவருடன் சுமார் 15 எம்.எல்.ஏ.க்களும் விலகினார்கள். அவர்களில் சிலர் பா.ஜனதாவில் சேர்ந்தனர். இது எங்கள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த தேர்தல் முடிவை வைத்து சரக்கு-சேவை வரி திட்டத்தை மக்கள் முழுமையாக ஆதரித்துவிட்டதாக கூற முடியாது.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பட்டேல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஹர்திக் பட்டேல் தொடர்பாக சில தவறான சி.டி.க்களை வெளியிட்டு மக்களை பா.ஜனதாவினர் திசை திருப்பினர். பா.ஜனதாவினர் இப்படி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டனர். இதை அரசியல் தந்திரம் என்று சொல்ல முடியாது. இதை மோசடி என்று தான் சொல்ல வேண்டும். அரசியல் தந்திரம் என்பது வேறு. தேர்தலின்போது இப்படி மோசடி வேலைகளில் ஈடுபடுவது சரியல்ல. நாங்கள் அதுபோன்ற வேலைகளில் ஈடுபட மாட்டோம்.

மக்கள் அங்கீகாரம்

ராகுல் காந்தி தலைமைக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது இன்னமும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்துவது தான் சரியாக இருக்கும். சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது.

எதிர்க்கட்சி தலைவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சி செய்கிறது. குஜராத்தில் கட்சியை அடிமட்டத்தில் கட்டமைப்பதில் சில குறைபாடுகள் உள்ளன.

அங்கு உள்ளூர் அளவில் செல்வாக்கான தலைவரை உருவாக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார். 

Next Story