மும்பையில் நொறுக்குதீனி கடையில் பயங்கர தீ விபத்து 12 தொழிலாளர்கள் உடல் கருகி பலி


மும்பையில் நொறுக்குதீனி கடையில் பயங்கர தீ விபத்து 12 தொழிலாளர்கள் உடல் கருகி பலி
x
தினத்தந்தி 19 Dec 2017 5:15 AM IST (Updated: 19 Dec 2017 3:51 AM IST)
t-max-icont-min-icon

மும்பை சாக்கிநாக்காவில் நொறுக்குதீனி கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அங்கு வேலை செய்து வந்த 12 தொழிலாளர்கள் உடல் கருகி பலியானார்கள்.

மும்பை,

மும்பை அந்தேரி கிழக்கு சாக்கிநாக்கா கைரானி சாலையில் மகாரியா காம்பவுண்டு பகுதியில் ‘பானு பர்சான்’ என்ற நொறுக்குதீனி தயார் செய்து விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் 18 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்தார்கள்.

நேற்றுமுன்தினம் இரவு வேலை முடிந்ததும் சிலர் கடையின் தரைதளத்தில் தூங்கினார்கள். மற்ற அனைவரும் மேல்தளத்தில் படுத்து இருந்தனர். அவர்களுக்கு நேற்றைய பொழுது துயர பொழுதாக விடிந்துவிட்டது. அதிகாலை 4.25 மணியளவில் திடீரென கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கொழுந்து விட்டு எரிந்த தீ

அப்போது தொழிலாளர்கள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த மின்சார வயர், எண்ணெய் மற்றும் நொறுக்குதீனி பாக்கெட்டுகளில் வேகமாக பரவி தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால் ஏற்பட்ட வெப்பதாக்கம் காரணமாக தரைதளத்தில் தூங்கி கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். கடை தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.

தீயில் விழுந்தனர்

மேல்தளத்தில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்கள் தப்பிக்க வழி தெரியாமல் கதறியபடி மேல்தளத்திலேயே அங்கும், இங்குமாக ஓடினர். அப்போது துரதிருஷ்டவசமாக கடையின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது.

இதில், மேல்தளத்தில் உயிரை காப்பாற்றி கொள்ளும் முயற்சியில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் தீயில் விழுந்தனர். அவர்கள் உடல் கருகினார்கள்.

12 பேர் பலி

தொழிலாளர்களின் அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்தனர். கடை தீப்பிடித்து எரிவதை பார்த்து பதறிப்போன அவர்கள் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் 3 வாகனங்கள் மற்றும் 4 தண்ணீர் டேங்கர்களுடன் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள். சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படையினர் கடைக்குள் சென்று தேடியபோது, உள்ளே 12 பேர் கரிக்கட்டையான நிலையில் மீட்கப்பட்டனர்.

உடனடியாக அவர்கள் ஆம்புலன்சுகள் மூலம் காட்கோபர் ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். டாக்டர்கள் பரிசோதனையில், ஏற்கனவே அவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

காரணம் என்ன?

போலீசார் அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உருதெரியாத அளவிற்கு கருகிப்போய் இருப்பதால் பலியானவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் மாலை 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதன்படி பலியானவர்கள் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்களான வாஷிம் சலீம், போலா, லல்லு, சல்லுபாய், ராஜூ யாதவ், லம்பு, நயிம் சலீம் மிர்சா, ராம்நரேஷ், குலாம் அலி, ஜிதேந்திரா என்பதும், இவர்கள் அனைவரும் 20 முதல் 35 வயதுக்குட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

பலியானவர்கள் அனைவரும் உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கண்டறியப்பட்டது.

12 பேரின் உயிரை பலி கொண்ட இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் கடையின் உரிமையாளர் ரமேஷ் பன்சாலி என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த கடை விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்தது தெரியவந்து உள்ளது.

தீ விபத்தில் 12 பேர் பலியான இந்த சம்பவம் மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story