புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப ஏற்பாடு பிரதமர் கூறியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேட்டி
“புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப ஏற்பாடு செய்யப்படும்“ என்று பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் தெரிவித்ததாக கன்னியாகுமரியில் அளித்த பேட்டியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கன்னியாகுமரி,
பிரதமர் நரேந்திரமோடி நேற்று கன்னியாகுமரி வந்து ‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது உடன் இருந்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
பிரதமர் நரேந்திரமோடி ‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களையும், விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ‘ஒகி‘ புயல் சேதம் அதிகமாக இருப்பதால் குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். புயலால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 747 கோடி ரூபாயும், நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள 5 ஆயிரத்து 255 கோடி ரூபாயும் மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம்.
சென்னை மற்றும் இதர கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கவும், இனிமேல் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாதவாறு நிரந்தர சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் 4 ஆயிரத்து 47 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.
அவற்றை பரிசீலிப்பதாக பிரதமர் தெரிவித்தார். மேலும் புயல் சேதங்களை, ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவை அனுப்புவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான நிதி உதவி வழங்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த நிவாரண நிதி போதாது என்ற விவசாயிகள் தரப்பில் கூறியதால் குமரி மாவட்ட நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து கூடுதல் நிதியை அறிவித்து இருக்கிறோம்.
நான் கடந்த 12–ந் தேதியன்று குமரி மாவட்டத்துக்கு நேரில் வந்து கள ஆய்வு செய்தேன். இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 5 லட்ச ரூபாயும் வழங்க உத்தரவிட்டேன். மேலும் பலியான மீனவர் குடும்பத்தில் கல்வி தகுதிக்கு ஏற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கப்பட்டு இருக்கிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனால் நிவாரணம் போதாது என்று மீனவர்கள் கூறியதால் கூடுதலாக 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கி உள்ளோம்.
காணாமல் போன மீனவர்கள் கரைக்கு வந்துகொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் பண்டிகைகள் முடிந்ததும் எவ்வளவு மீனவர்கள் வந்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும். எனினும், காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. கடைசி மீனவர் கிடைக்கும் வரை தேடும் பணி தொடரும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார். பேட்டியின் போது துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் மற்றும் பலர் உடனிருந்தனர்.