திருவொற்றியூர்- பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்


திருவொற்றியூர்- பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 20 Dec 2017 4:00 AM IST (Updated: 20 Dec 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் திருவொற்றியூர்- பொன்னேரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மீஞ்சூர்,

திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் எலந்தனூர், ஆண்டார்குப்பம், குளக்கரை, பெரியஈச்சங்குழி, விச்சூர், வெள்ளாங்குளம், மணலிபுதுநகர், வெள்ளிவாயல், புதுநாப்பாளையம், பழையநாப்பாளையம், வெள்ளிவாயல்சாவடி, கொண்டகரை, கவுண்டர்பாளையம், வல்லூர், மேலூர், பட்டமந்திரி, மீஞ்சூர், நாலூர், மேட்டுப்பாளையம், இலவம்பேடு, கொக்குமேடு, தடப்பெரும்பாக்கம், திருவேங்கிடாபுரம், வேண்பாக்கம், பொன்னேரி, கொடூர், மாதவரம், ஆண்டார்குப்பம், தச்சூர் கூட்டுசாலை உட்பட ஏராளமான கிராமங்கள் உள்ளன.

திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலைக்கு அருகே தற்போது ஏராளமான கன்டெய்னர் முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இங்கு எண்ணூர் துறைமுகம், வடசென்னை அனல் மின்நிலையம் உள்ளது.

திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலையில் அதிக பாரத்தை ஏற்றிக்கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் சாலை குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எண்ணூர் துறைமுகம், தமிழகஅரசின் போக்குவரத்து துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை அமைப்புடன் இணைந்து ரூ.253 கோடி செலவில் 4 வழிசாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. இந்த நிலையில் பழுதடைந்த சாலையால் இந்த வழித்தடத்தில் செல்லும் பெரும்பாலான மாநகர பஸ்கள் குறைக்கப்பட்டுள்ளன.

பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலை கன்டெய்னர் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியதால் பொக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழை வெள்ளத்தால் திருவொற்றியூர்- பொன்னேரி நெடுஞ்சாலை 100 அடி சாலையில் தொடங்கி வல்லூர் வரை சாலைகள் குண்டும், குழியுமாக மாறியது. சாலை தடுப்பு சுவர்கள் சேதம் அடைந்து சாலையில் மண் குவியல்கள் சேர்ந்தது. அவை தற்போது வரை அப்புறப்படுத்தாமல் உள்ளதால் தூசிகள் காற்றில் பரவி மாசு ஏற்படுத்தி சாலையோர மக்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.

சாலை விபத்துகளால் ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். 100 அடி சாலையில் இருந்து மீஞ்சூர் வரை 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறங்களிலும் கல் குவியல்கள் காணப்படுகிறது. மேலும் முள்செடிகள் வளர்ந்துள்ளன. திருவொற்றியூர் பொன்னேரி நெடுஞ்சாலை மீஞ்சூரில் இருந்து ரூ.47 கோடி செலவில் 11 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வழி சாலை விரிவாக்கப்பணி கடந்த ஆண்டு தொடங்கி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கப்பணிக்கு பயன்படுத்தும் செயற்கை மணலால் தூசிகள் காற்றில் கலந்து மாசு ஏற்படுவத்துடன் பொதுமக்களுக்கு சுவாச கோளாறுகளை உருவாக்குகிறது.

இதனால் மீஞ்சூர் பஜாரில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இந்த சாலையில் நாள்தோறும் கனரக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் செல்வதாலும் அதிக பாரத்துடன் செல்வதாலும் சாலை சேதமுற்று மண் தூசிகளை உண்டாக்குகிறது. சாலை அகலப்படுத்தும் பணி பொன்னேரி பகுதியில் முடிவடையாத நிலையில் தூசியால் மாசு ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவொற்றியூர்-பொன்னேரி நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். எண்ணூர் காமராஜர் துறைமுகம், வடசென்னை மற்றும் வல்லூர் அனல்மின் நிலைய சாம்பல் கழிவு, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்பட பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனத்திற்கு அதிக பாரத்துடன் பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களை மீஞ்சூர் வழியாக செல்வதை தடுத்து அரசு அனுமதித்த சாலையை பயன்படுத்த வேண்டும். விபத்துகளை தடுத்து மீண்டும் பஸ் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story