மதுரை வைகை ஆற்றில் மூழ்கிய மகனை மீட்டு ஆஜர்படுத்தக்கோரி ஐகோர்ட்டில் பெண் வழக்கு
திண்டுக்கல் மாவட்டம், லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த ருக்மணி.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம், லெட்சுமிபுரத்தைச் சேர்ந்த ருக்மணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் கூறியிருந்ததாவது:–
எனக்கு தினேஷ்குமார், ஜெயசூர்யா என 2 மகன்கள் இருந்தனர். கடந்த 7–ந்தேதி எனது கணவரும், 2–வது மகன் ஜெயசூர்யாவும் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள எனது சகோதரர் கதிரேசன் வீட்டிற்கு சென்றனர். அன்று மதியம் வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அதனை கண்டு ரசிப்பதற்காக எனது சகோதரர் மகன் கோகுலகிருஷ்ணனும், என் மகன் ஜெயசூர்யாவும் செல்பி எடுப்பதற்காக வைகை ஆற்றுக்கு சென்றனர்.
வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தின் அருகில் செல்பி எடுக்கும்போது மண் சரிந்து இருவரும் ஆற்றுக்குள் தவறி விழுந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் கோகுலகிருஷ்ணனை உடனடியாக மீட்டுள்ளனர். ஜெயசூர்யாவை மீட்க முடியவில்லை. கோரிப்பாளையம் முதல் வண்டியூர் பாலம் வரை தேடியும் அவனை கண்டுபிடிக்கமுடியவில்லை.
இதுகுறித்து மதிச்சியம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். எனது மகன் மாயமாகி 12 நாளாகியும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. எனவே ஜெயசூர்யாவை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, ஜெகதீஷ்சந்திரா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், மனுதாரரின் மகனை தேடும் பணி தொடர்பாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் தகவல் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.