வனவிலங்குகள் நிறைந்த பாதை வழியாக பள்ளிக்கு நடந்து செல்லும் ஆதிவாசி மாணவர்கள்
வனவிலங்குகள் நிறைந்த பாதை வழியாக ஆதிவாசி மாணவ–மாணவிகள் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர். இதனால் அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதால் பெற்றோர் அச்சப்பட்டு வருகின்றனர்.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் ஜக்கனாரை ஊராட்சி பனகுடி கிராமத்தில் 30–க்கும் மேற்பட்ட ஆதிவாசி இன மக்கள் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்கள் தங்களின் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பள்ளியில் சேர்ந்து உள்ளனர்.
எனவே அங்குள்ள மாணவ மாணவிகள் பனகுடி கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேசலாடா அரசு தொடக்கப் பள்ளிக்கு செல்கின்றனர். அந்த பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை படிக்கும் 10–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
அவர்கள் பள்ளிக்கு நடந்து செல்லும் பாதையில் அடர்ந்த வனப்பகுதியாகவும், தேயிலை தோட்டங் களும் நிறைந்து உள்ளன. மேலும் அங்கு காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக எண்ணிக் கையில் உள்ளன. குறிப்பாக 50–க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் எப்போதும் சுற்றித்திரியும்.
இதனால் உதவிக்கு கூட ஆட்கள் யாரும் வர முடியாத வனப்பகுதி வழியாக மாணவ–மாணவிகள் வனவிலங்குகள் வந்து விடுமோ என்ற அச்சத்துடன் நடந்து செல்கின்றனர். மேலும் மாணவர்கள் நடந்து செல்லும் பாதையில் கற்கள் நிறைந்து கரடு முரடாகவும், சில இடங்களில் புதர்செடிகள் வளர்ந்தும், சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
கரடு முரடான பாதையில் செல்லும் போது கீழே விழாமல் இருக்க தரையை பார்த்து நடப்பதா? அல்லது புதருக்குள் இருந்து வனவிலங்குகள் ஏதும் வருவதை கவனிப்பதா? என்ற அச்சத்துடன் மாணவ –மாணவிகள் நடந்து செல்கின்றனர். சில நேரங்களில் மாணவர்கள் செல்லும் பாதையில் காட்டெருமைகள் படுத்துக் கொள்கின்றன. இதனால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தான் பள்ளிக்கோ, வீட்டிற்கோ செல்ல முடிகிறது. இதன் காரணமாக அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
பள்ளிக்கு கரடுமுரடான பாதை வழியாக செல்ல வேண்டியது இருப்பதால் சில பெற்றோர் தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
இது குறித்து ஆதிவாசி மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:–
எங்களின் குழந்தைகள் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் அவர்கள் பள்ளிக்கு செல்லம் பாதையில் வன விலங்குகள் நிறைய உள்ளன. மேலும் அந்த பாதை கரடுமுரடாக, சேறும், சகதியுமாக இருப்பதால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதனால் அவர்கள் தினமும் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
எனவே மாணவ–மாணவிகளை பாதுகாப்பாக அழைத்து சென்று வர பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பாதுகாவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்று வருகிறார். ஆனாலும் வன விலங்குகள் வரும் போது தனி ஒருவரால் மாணவர்களை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.
எனவே ஆதிவாசி கிராம மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு செல்லும் நடைபாதையின் இரு புறங்களிலும் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். சோலார் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். கரடு முரடாக கற்கள் நிறைந்து காணப்படும் நடைபாதையையும் சீரமைக்க வேண்டும். அதற்குரிய பணிகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.