4–ம் மண்டல பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க கோரி பி.ஏ.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
திருமூர்த்தி அணையில் இருந்து 4–ம் மண்டல பாசனத்துக்கு கூடுதலாக ஒரு சுற்று தண்ணீர் வழங்ககோரி 3 பொள்ளாச்சி பி.ஏ.பி.கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு, தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி,
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டத்தின் (பி.ஏ.பி.)மூலம் பயன்அடைந்து வருகிறது. திருமூர்த்தி அணையில் இருந்து திறக்கப்படும் இந்த பாசன நீரை கொண்டு விவசாயிகள் நீண்ட நாள் பயிர்மற்றும் குறுகிய கால பயிர்சாகுபடி மேற்கொள்கின்றனர். விவசாயிகள் நலன் கருதி 4 மண்டலங்களாக பிரித்து பாசன நீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, 4–ம் மண்டலத்திற்கு இரண்டாம் சுற்று தண்ணீர் கடந்த அக்டோபர் மாதம் 8–ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சுற்றுக்கு 21 நாட்கள்ஆயிரத்து 900 மில்லியன் கன அடி வீதம் என இரண்டு சுற்றுக்கு 3 ஆயிரத்து 800 மில்லியன் கன அடி வழங்கப்பட்டு வருகிறது. இச்சுற்று நாளை (21–ந் தேதி)நிறைவு பெறுகிறது.
இந்த நிலையில், 4–ம் மண்டல பாசனப்பகுதியில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால் பாசன நீரை நம்பி 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம் மற்றும் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலைப்பயிரான தென்னை மரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தென்னை மற்றும் பயிர்கள் கருகி காய்ந்து பெரும்நஷ்டம் ஏற்படுவதை தடுக்க 4–ம் மண்டல பாசனத்திற்கு கூடுதலாக ஒரு சுற்றுதண்ணீர் திறந்து விவசாயிகள்கோரிக்கை விடுத்தனர். ஆனால், இக்கோரிக்கையை பி.ஏ.பி.அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. தங்கள் வாழ்வாதார முக்கிய கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்காததால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் சுமார் 3 ஆயிரம் பேர் நேற்று காலை11 மணி அளவில் திருமூர்த்திநீர் தேக்கத் திட்டக்தலைவர் மெடிக்கல் கே.பரமசிவம் தலைமையில் திரண்டு பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் உள்ள பி.ஏ.பி. கண்காணிப்புபொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், கூடுதலாக ஒரு சுற்றுதண்ணீர் வழங்க அரசு முன் வரவேண்டும் எனகோரி கோஷங்கள் எழுப்பினர். விவசாயிகள் முற்றுகைப்போராட்டத்தில் எந்தவிதமானஅசம்பாவிதம் நடைபெறாமால் இருக்கவும், பொள்ளாச்சி –உடுமலை ரோட்டில் போக்குவரத்து இடையூறு, நெரிசலை தடுக்க பொள்ளாச்சிபோலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ் பெக்டர்கள் தங்கராஜ், சுப்பிரமணியம் தலைமையில்89 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பு பொறியாளர் நடராஜன் (பொறுப்பு)பாசன சங்க நிர்வாகிகள் சிலரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் 4–ம் மண்டல பாசனத்தில் விவசாயிகள் விடுத்த ஒரு சுற்றுகூடுதல் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையில் அரை சுற்று அதாவது 11 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடுவதாக அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். இதேபோல், முதலாம் மண்டலத்துக்கு இரண்டு சுற்று தண்ணீர்விடப்பட்ட பின்பு மழை மற்றும் அணைகளில் நீர் இருப்பை கொண்டு கூடுதலாக அரைசுற்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிஅளித்தனர். அதிகாரிகளின் இந்த கோரிக்கையை விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து,3 மணிக்கு தங்கள் போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.
முன்னதாக விவசாயிகள் கூறியதாவது:–ஆழியாறு பாசனத்திற்கு ஏன் இவ்வளவு தண்ணீர் வழங்குகிறீர்கள் என்று அதிகாரிகளை கேட்கவில்லை. ஆழியாறு புதிய ஆயக்கட்டிற்கு கொடுக்கப்படும் தண்ணீரின் அளவு திருமூர்த்தி புதிய ஆயக்கட்டுக்கும் வழங்க வேண்டும் என்று தான் கேட்கிறோம். இரண்டு பாசனங்களுக்கும் பரம்பிக்குளத்தில் இருந்துதான் தண்ணீர் வருகிறது என்பதைஅதிகாரிகள் மறந்து விட்டார்கள். இந்த ஆண்டு பாலாற்றில் 300 மில்லியன் கன அடி தண்ணீர்கூட வராத நிலையில் 720 மில்லியன் கன அடி தண்ணீரை தளி பாசனத்திற்கு வழங்க அரசு ஆணை பெறப்பட்டுள்ளது எப்படிஎன தெரியவில்லை. பரம்பிக்குளத்தில் இருந்து சர்க்கார் பதி மின் நிலையம் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லும் தண்ணீரை விதிமுறைகளுக்கு புறம்பாக ஆழியாறு அணைக்கு அதிகப்படியாக தண்ணீரை இறக்கி கொள்கிறார்கள். இதனால், திருமூர்த்தி அணைமூலம் பாசனம் பெறும் 3 லட்சத்து 77 ஆயிரத்து 162 ஏக்கர் பாசன விவசாயிகள்கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். உயர்அதிகாரிகள் இது குறித்துவிசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.