காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் சாவு உடல் விமானம் மூலம் கொண்டு வர ஏற்பாடு


காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் சாவு உடல் விமானம் மூலம் கொண்டு வர ஏற்பாடு
x
தினத்தந்தி 20 Dec 2017 4:30 AM IST (Updated: 20 Dec 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் இறந்தார். அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வர ஏற்பாடு நடந்து வருகிறது.

கரூர் ,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. அங்கு பந்திப்போரா மாவட்டம் குரெஸ் பகுதியில் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே கடந்த 9-ந் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பனிப்பாறைகள் சரிந்து எல்லையோரம் பக்தூரில் பாதுகாப்பு பணியில் இருந்த 5 ராணுவ வீரர்கள் சிக்கினர்.

5 பேரில் ஒருவர் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் பக்கம் நாச்சி களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த மூர்த்தியும்(வயது 33) ஆவார். அவரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக ராணுவ முகாமில் இருந்து மூர்த்தியின் மனைவி தமிழரசிக்கு கடந்த 13-ந் தேதி செல்போன் மூலம் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனால் தமிழரசி மற்றும் மூர்த்தியின் பெற்றோர், உறவினர்கள் கவலை அடைந்தனர்.

மூர்த்தியை உயிருடன் மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் கோவிந்தராஜிடம் தமிழரசி மற்றும் உறவினர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இந்த நிலையில் பனிச்சரிவில் சிக்கியவர்களில் 2 பேரை சம்பவத்தன்று ராணுவ அதிகாரிகள் மீட்டனர். அதில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது இறந்தார். இதையடுத்து மூர்த்தி உள்பட 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்தது.

இதில் 30 சிறப்பு கமாண்டோ வீரர்கள், 80 ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் மோப்பநாய் உதவியுடன் தேடும் பணி நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 ராணுவ வீரர்களின் உடலை மீட்பு குழுவினர் மீட்டனர். தொடர்ந்து மூர்த்தியை மட்டும் தேடும் பணி நீடித்தது. கடந்த 2 நாட்களாக ராணுவ முகாமில் இருந்து மூர்த்தி பற்றி எந்தவித தகவலும் வராததால் தமிழரசியும், உறவினர்களும் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் ராணுவ முகாமில் இருந்து தமிழரசியின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசிய அதிகாரி, மூர்த்தி இறந்து விட்டதாகவும், அவரது உடலை பனிக்கட்டிகளிடையே இருந்து இன்று (அதாவது நேற்று) மாலை 5.30 மணிக்கு மீட்பு குழுவினர் மீட்டதாகவும், உடலில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் மூர்த்தியின் உடலை ராணுவ முகாமிற்கு கொண்டு சென்று அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பின்பு நாளை (அதாவது இன்று) விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை அல்லது திருச்சிக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார். இந்த தகவலை கேட்ட தமிழரசி அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும் வீட்டில் இருந்தவர்களும் கதறி அழுதனர்.உயிருடன் மீட்கப்பட்டுவிடுவார் என நம்பிக்கையுடன் இருந்த நிலையில் இறந்து விட்டதாக வந்த தகவலால் மூர்த்தியின் உறவினர்களும் சோகமடைந்தனர். அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. 

Next Story