மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் 21 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன கலெக்டர் தகவல்


மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் 21 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2017 4:00 AM IST (Updated: 20 Dec 2017 1:03 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் இதுவரை 21 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கரூர்,

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் காக்காவாடி ஊராட்சி அம்மையப்பகவுண்டன்புதூரில் பசுமை போர்வை திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரித்து வரப்படுகிறது. இந்த பணியினை கலெக்டர் கோவிந்தராஜ் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், காற்று மாசுவை தடுக்கவும், வெப்பத்தின் அளவை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் 2017-2018-ம் ஆண்டிற்கு சாலையோரங்களில் 82 கிலோ மீட்டர் நீளத்திற்கு 15 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.

28 ஆயிரம் மரக்கன்றுகள்

பசுமை போர்வை திட்டத்தில் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 21 லட்சம் மதிப்பில் 13 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணிநடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் 28 ஆயிரம் மரக்கன்றுகள் ரூ.3 கோடியே 99 லட்சம் மதிப்பில் நடவு செய்ய திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில் நடப்பாண்டில் இதுவரை 21 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மேலும் கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குக்கிராமங்கள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2016-2017-ம் ஆண்டில் கிராம ஊராட்சி பகுதிகளில் ரூ.6 கோடியே 91 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் 37 குளங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் 30 குளங்கள் அமைக்கும் பணி நிறைவுற்றுள்ளது. மீதமுள்ள 7 குளங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், கனகராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story