சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்–சரக்கு வேன் மோதல்: திருப்பூர் கலெக்டர் அலுவலக ஊழியர் சாவு
உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்து விட்டு திரும்பியபோது சத்தியமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள், சரக்கு வேன் மோதிக்கொண்ட விபத்தில் திருப்பூர் கலெக்டர் அலுவலக ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
சத்தியமங்கலம்,
திருப்பூர் மாவட்டம் அவினாசி செல்வபுரத்தை சேர்ந்தவர் நீலமலை முத்துசாமி (வயது 60). இவருடைய மனைவி கருப்பாத்தாள் (58). இவர்களுக்கு நெப்போலியன் (24), சாக்ரடீஸ் (21), வல்லரசு (18) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் நெப்போலியன், திருப்பூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு வருகிற 5–ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழை கொடுக்க ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதிக்கு நெப்போலியனும், நீலமலை முத்துசாமியும் வந்தார்கள்.
திருமண அழைப்பிதழை வழங்கிவிட்டு சொந்த ஊர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை நெப்போலியன் ஓட்டினார். அவருக்கு பின்னால் நீலமலை முத்துசாமி உட்கார்ந்திருந்தார். சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்குய்யனூர் பகுதியில் வந்தபோது எதிரே வந்த சரக்கு வேனும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில் நெப்போலியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. நீலமலை முத்துசாமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் 2 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நெப்போலியனை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.