ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் போலீசார் போல் நடித்து நகைகள் அபேஸ் 2 பேருக்கு வலைவீச்சு


ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் போலீசார் போல் நடித்து நகைகள் அபேஸ் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Dec 2017 9:45 PM GMT (Updated: 19 Dec 2017 9:38 PM GMT)

ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் போலீசார் போல் நடித்து நகைகளை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் போலீசார் போல் நடித்து நகைகளை அபேஸ் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

முன்னாள் ஊழியர்


மும்பை கிர்காவ் பகுதியை சேர்ந்தவர் பல்வந்த் வாசுதேவ்(வயது75). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் சம்பவத்தன்று காலை 11 மணி அளவில் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பல்வந்த் வாசுதேவிடம் பேச்சு கொடுத்தனர். இருவரும் தங்களை போலீஸ்காரர்கள் என கூறி அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டனர். மேலும், இந்த பகுதியில் நகைப்பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதாகவும், எனவே அவர் அணிந்து உள்ள மோதிரம், தங்கச்சங்கிலியை கழற்றி துணியில் பொதிந்து வைத்துக்கொள்ளுமாறும் பல்வந்த் வாசுதேவிடம் தெரிவித்தனர்.

2 பேருக்கு வலைவீச்சு

இதனை நம்பிய அவர் நகைகளை கழற்றினார். அப்போது அந்த நபர்கள் அந்த நகைகளை வாங்கி தாங்கள் வைத்திருந்த துணியை எடுத்து அதில் பொதிந்து கொடுத்து உள்ளனர். பின்னர் இருவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் வீட்டிற்கு சென்ற பல்வந்த் வாசுதேவ் துணியை பிரித்து பார்த்த போது, அதில் நகைகளுக்கு பதிலாக கற்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சம்பவம் குறித்து வி.பி. ரோடு போலீசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வந்த் வாசுதேவிடம் நகைகளை அபேஸ் செய்து சென்ற ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story