காருக்குள் பிணமாக கிடந்த நிதிநிறுவன அதிபர் சாவில் சந்தேகம் போலீசில் மனைவி புகார்


காருக்குள் பிணமாக கிடந்த நிதிநிறுவன அதிபர் சாவில் சந்தேகம் போலீசில் மனைவி புகார்
x
தினத்தந்தி 20 Dec 2017 3:36 AM IST (Updated: 21 Dec 2017 10:44 PM IST)
t-max-icont-min-icon

திசையன்விளை அருகே, காருக்குள் பிணமாக கிடந்த நிதிநிறுவன அதிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக, அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார்.

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 52). இவர் திசையன்விளையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மதியம் காரில் வெளியே புறப்பட்டுச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வராஜின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.

அப்போது அப்புவிளை காட்டுப் பகுதியில் நீண்ட நேரமாக ஒரு கார் நிற்பதாக அவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அந்த கார், செல்வராஜ்க்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. காரின் பின்பக்க இருக்கையில் செல்வராஜ் பிணமாக கிடந்தார்.

அவரது சாவு பற்றி, அவருடைய மனைவி சண்முகசுந்தரி, திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது கணவர், பணப்பிரச்சினை இருக்கிறது. அதனை தீர்த்துவிட்டு வருகிறேன் என கூறி வெளியே சென்றார். எனவே தனது கணவர் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார்.

புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். செல்வராஜ்க்கு 2 மகள்கள் உள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் அவரது மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.


Next Story