ராமேசுவரத்தில் விடிய விடிய பலத்த மழை 78 மில்லி மீட்டர் பதிவானது
ராமேசுவரத்தில் விடியவிடிய பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக ராமேசுவரத்தில் 78 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம், தொண்டி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. ஒகி புயலுக்குபின் ராமேசுவரத்தில் கடந்த 15 நாட்களாக மழை பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியில் இருந்து 7 மணி வரை லேசான மழை பெய்தது.
அதனை தொடர்ந்து நள்ளிரவு முதல் நேற்று காலை வரை விடிய விடிய ராமேசுவரம், தனுஷ்கோடி, தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பேய்க்கரும்பில் அப்துல்கலாம் மணிமண்டபம் முன்பு மழை நீர் அதிகஅளவில் தேங்கியது. இதையடுத்து மோட்டார் மூலம் மழைநீர் அகற்றப்பட்டது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழைஅளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:–
ராமேசுவரம் 78, தங்கச்சிமடம் 49, மண்டபம் 47, பாம்பன் 43, ராமநாதபுரம் 11, பள்ளமோர்குளம் 8, முதுகுளத்தூர் 8, கடலாடி 5, வாலிநோக்கம் 5, ஆர்.எஸ்.மங்கலம் 3, தொண்டி 3, கமுதி 6. (சராசரி மழை அளவு 17 மி.மீ).