மண்டபம் அருகே கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய ஆமை


மண்டபம் அருகே கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய ஆமை
x
தினத்தந்தி 21 Dec 2017 3:30 AM IST (Updated: 21 Dec 2017 12:25 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் அருகே கடற்கரையில் நேற்று உயிருடன் ஆமை ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பனைக்குளம்,

மண்டபம் அருகே உள்ள பிரப்பன்வலசை கடற்கரையில் நேற்று உயிருடன் ஆமை ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மண்டபம் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று ஆமையை பார்வையிட்டபோது அது சித்தாமை வகையை சேர்ந்தது என்பது தெரியவந்தது. பின்னர் அந்த ஆமையை மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். அங்கு ஆமையை விஞ்ஞானிகள் பராமரித்து வருகின்றனர்.

இதே போல் தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்த கடற்கரையில் நேற்று சுமார் 50 கிலோ எடை கொண்ட கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய அந்த ஆமையை வனத்துறையினர் பார்வையிட்டு கடற்கரையில் குழி தோண்டி புதைத்தனர். வில்லூண்டி தீர்த்த கடற்கரையில் கரை ஒதுங்கிய அந்த ஆமையானது முட்டையிடுவதற்காக தனுஷ்கோடி கடற்கரையை நோக்கி நீந்தி செல்லும்போது மீன்பிடி படகில் அடிபட்டு கரை ஒதுங்கியிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story