தேசிய அறிவியல் மாநாட்டுக்கு மாணவ-மாணவிகள் தேர்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு


தேசிய அறிவியல் மாநாட்டுக்கு மாணவ-மாணவிகள் தேர்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு
x
தினத்தந்தி 21 Dec 2017 4:15 AM IST (Updated: 21 Dec 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் நடைபெறும் தேசிய அறிவியல் மாநாட்டிற்கு தேர்வான மாணவ-மாணவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி,

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு என்ற குழந்தைகளுக்கான அறிவியல் ஆய்வு நிகழ்ச்சி கடந்த 25 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையும், தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழுமமும் இணைந்து நடத்துகின்றன. தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் தன்னார்வ அமைப்பும், இந்தியாவின் பிற மாநிலங்களில் அரசு சார்ந்த அமைப்புகளும் நடத்துகின்றன. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலைப்புகள் மாற்றப்பட்டு ஆய்வு செய்ய தகவல் அளிக்கப்படும்.

அதன்படி இவ்வாண்டு மாற்றுத்திறனாளிகளின் செயல்பாட்டிற்கு உதவும் அம்சங்களுடன் கூடிய நிலைப்பாடு, மேம்பாட்டிற்கான அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, புளோரைடு, தைராய்டு பிரச்சினை, ஆலோசனை மற்றும் அரசுக்கு பரிந்துரை என்ற உப தலைப்பில் கடந்த மாதம் ஓசூர் அருகே உள்ள பெருமாள் மணிமேகலை கல்லூரியில் நடந்த மாவட்ட மாநாட்டில் ஐன்ஸ்டீன் துளிர் இல்லம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கை, மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை சென்னையில் நடந்த மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 281 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் கிருஷ்ணகிரி ஐன்ஸ்டீன் துளிர் இல்ல மாணவ-மாணவிகள் ஜெயசுதா, ரட்னீஷ்ராஜ், கிளிண்டா ஜெப்பி, சஞ்சய், தரணீஷ்ராஜ், நிவாஸ்ரீ ஆகியோர் தங்கள் ஆய்வறிக்கையை சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர். இவர்கள் சமர்ப்பித்த 30 ஆய்வுகள் குஜராத்தில் நடைபெறும் தேசிய மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டன.

தேசிய மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவ- மாணவிகளையும், இவர் களுக்கு உறுதுணையாக இருந்த நெக்குந்தி அரசு உயர்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியை சாந்தகுமாரி ஆகியோரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி பதக்கம் அணிவித்து பாராட்டினார். அப்போது முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணி, நெக்குந்தி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமோதரன், அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அசோக் ஆண்டர்சன் மற்றும் துளிர் இல்ல பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். 

Next Story