குடிநீர் வசதி கேட்டு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் உண்ணாவிரதம்


குடிநீர் வசதி கேட்டு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 21 Dec 2017 4:30 AM IST (Updated: 21 Dec 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில், குடிநீர் வசதி கேட்டு வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடு பட்டனர். இதையொட்டி அங்கு போலீஸ் குவிக்கப் பட்டது.

சேலம்,

சேலம் சன்னியாசிகுண்டு ஊராட்சியில் உள்ள பாத்திமா நகர், காமராஜர் நகர், ராமசாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு நகராட்சி மூலம் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் அது நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் இந்த பகுதிகளில் உப்பு தண்ணீரும் போதிய அளவில் கிடைக்கவில்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.

மேலும் பணம் கொடுத்து லாரிகள் மூலம் குடிநீர் பெற்று வந்தனர். குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணக்கோரி கடந்த மாதம் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு நேற்று காலை வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார்(பொறுப்பு) மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் வீடுகளில் கட்டப்பட்ட கருப்பு கொடியை அகற்றினர்.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அதே பகுதியில் உள்ள ரேஷன் கடை முன்பு திரண்டனர். அங்கு அவர்கள் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து அங்குள்ள நூலக அலுவலகத்தில் அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கோபி, சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் மாதேஸ்வரன் மற்றும் பொதுமக்கள் சிலர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை நீண்ட நேரம் வரை நீடித்தது. பின்னர் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, பொதுமக்கள் தரப்பில் கலந்து கொண்டவர்கள் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.

அப்போது அவர்கள் அங்கு பேசும் போது, ‘நம்முடைய கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக பேசினோம். அதற்கு அதிகாரிகள் தரப்பில் சில உறுதிகள் அளிக்கப்பட்டது. நகராட்சி மூலம் தினமும் லாரிகள் மூலம் 3 முறை நம்முடைய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கப்படும். இதற்கு பொதுமக்கள் பணம் கொடுக்க தேவையில்லை. மேலும் 20 இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்கப்படும். இதுதவிர, 30 நாட்களுக்குள் குடிநீர் குழாய் அமைத்து சீரான தண்ணீர் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். எனவே அதிகாரிகள் பேச்சுக்கு மரியாதை கொடுத்து தற்போது நாம் கலைந்து செல்வோம். 30 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு இல்லையெனில் கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்துவோம்’ என்றனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story