மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி பெண் என்ஜினீயரிடம் ரூ.34 லட்சம் மோசடி
மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி கோவை பெண் என்ஜினீயரிடம் ரூ.34 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
கோவை,
கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் மீனா(வயது 22). என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். கோவை சின்னதடாகத்தை சேர்ந்தவர் திவாகரன். இவருடைய மனைவி தன்யலட்சுமி(25). மீனாவுக்கும், தன்யலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து மீனாவை, தன்யலட்சுமி தனது கணவர் திவாகரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது மீனா, என்ஜினீயரிங் பிரிவில் பி.டெக் படித்து முடித்து இருப்பதாகவும், வேலை தேடி வருவதாகவும் தெரிவித்தார். அப்போது திவாகரன் ‘நான் மலேசியாவில் ஏற்கனவே வேலைபார்த்துள்ளேன். எனக்கு அங்குள்ள நிறைய கம்பெனிகளில் வேலை பார்க்கும் நண்பர்களை தெரியும். உங்கள் படிப்புக்கு மாதம் ரூ.4½ லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்’ என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய மீனா, தான் மலேசியாவுக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார். அதன்படி திவாகரன் மீனாவிடம் விசா, பாஸ்போர்ட் உள்ளிட்டவை எடுக்க பணம் தேவைப்படுகிறது என்றார். இதையடுத்து மீனா வங்கி மூலம் திவாகரனுக்கு பணம் கொடுத்தார். மேலும் மீனா தனக்கு தெரிந்தவர்களிடமும் இதுகுறித்து கூறியுள்ளார். அவர்களும் திவாகரன், அவரது மனைவி தன்யலட்சுமி மற்றும் உறவினர்கள் 4 பேரின் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மொத்தம் ரூ.34 லட்சம் வேலைக்காக கொடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் மீனாவுக்கு மலேசியா செல்ல விசா கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்டு அவர் மலேசியாவுக்கு சென்றார். அங்கு சென்றபோது திவாகரன் சொன்னது போல் வேலை ஏதும் கிடைக்கவில்லை. மேலும் மீனாவுக்கு கொடுத்தது 10 நாட்கள் மட்டும் தங்கக்கூடிய சுற்றுலா விசா என்பதும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா மலேசியாவில் இருந்து கோவைக்கு திரும்பினார். அவர் திவாகரன், அவரது மனைவி தன்யலட்சுமி ஆகியோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. நேரில் சென்றபோதும் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து மீனா மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் மோசடி செய்த திவாகரன், அவருடைய மனைவி தன்யலட்சுமி, இதற்கு உடந்தையாக இருந்ததாக திவாகரனின் தாய் மாணிக்கம், மற்றும் சுந்தர்ராஜன், மோகன், ரவிசங்கர் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.