டி.வி. பார்த்து கொண்டிருந்த மூதாட்டியின் கண்ணில் சாம்பார் பொடி தூவி நகையை பறித்த பெண் கைது


டி.வி. பார்த்து கொண்டிருந்த மூதாட்டியின் கண்ணில் சாம்பார் பொடி தூவி நகையை பறித்த பெண் கைது
x
தினத்தந்தி 21 Dec 2017 3:45 AM IST (Updated: 21 Dec 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

டி.வி. பார்த்துக்கொண்டிருந்த மூதாட்டியின் கண்ணில் சாம்பார் பொடி தூவி நகையை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி மணிமேகலை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இறந்து விட்டார். இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 67). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் உட்கார்ந்து கொண்டு டி.வி. பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருடைய வீட்டில் நைசாக ஒரு பெண் புகுந்தார். டி.வி. பார்ப்பதில் ஆர்வமாக இருந்ததால் வீட்டுக்குள் நுழைந்த அந்த பெண்ணை அவர் கவனிக்கவில்லை.

வீட்டின் உள்ளே நுழைந்த பெண் கண் இமைக்கும் நேரத்தில் தான் கொண்டு வந்த சாம்பார் பொடியை வள்ளியம்மாள் கண்ணில் தூவினார். இதனால் அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு கைகளால் கசக்க தொடங்கினார்.

உடனே வள்ளியம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை அந்த பெண் பறிக்க முயன்றாள். இதில் சுதாரித்துக்கொண்ட வள்ளியம்மாள், தான் அணிந்திருந்த நகையை கையால் பிடித்து கொண்டு சத்தம் போட்டு கத்தினார். எனினும் அந்த பெண் 1½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற பெண்ணை வலைவீசி தேடி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோபி பஸ் நிலையத்தில் போலீசார் ரோந்து வந்தனர். அப்போது ஒரு பஸ்சில் இருந்து சந்தேகப்படும் வகையில் ஒரு பெண் நடந்து சென்றார். உடனே போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அந்த பெண் மணிமேகலை வீதியில் வள்ளியம்மாள் வீட்டின் அருகில் வசித்து வரும் சக்திவேல் என்பவரின் மனைவி புஷ்பவல்லி (52) என்பதும், அவர்தான் வள்ளியம்மாள் கண்ணில் சாம்பார் பொடி தூவி நகையை பறித்து சென்றதும்,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புஷ்பவல்லியை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 1½ பவுன் சங்கிலியையும் மீட்டனர்.

மூதாட்டியின் கண்ணில் சாம்பார் பொடி தூவி நகை பறித்த சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story