பழமையான கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? கிராமமக்கள் எதிர்பார்ப்பு


பழமையான கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? கிராமமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 21 Dec 2017 4:15 AM IST (Updated: 21 Dec 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

பிள்ளையாம்பேட்டையில் உள்ள பழமையான சிவன் மற்றும் பெருமாள் கோவில்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாம்பேட்டை கிராமத்தில் காசிவிஸ்வநாதர் கோவில், வரதராஜபெருமாள் கோவில் ஆகிய 2 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் சிதிலம் அடைந்து இருப்பதால் பக்தர்கள் பயத்துடன் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் காசிவிஸ்வநாதர் கோவிலில் இருந்த 2 சாமி சிலைகளை காணவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். வரதராஜ பெருமாள் கோவிலுக்கு அருகே கிடக்கும் பூதேவி சிலைக்கும் பாதுகாப்பு இல்லை. இதுகுறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் பழமையான கோவில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிள்ளையாம்பேட்டை கிராமத்தில் உள்ள காசிவிசுவநாதர் கோவிலும், வரதராஜ பெருமாள் கோவிலும் பராமரிப்பின்றி கிடக்கின்றன. பழமையான இக்கோவில்கள் காலத்தின் பொக்கிஷம் ஆகும். இவற்றை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காசிவிஸ்வநாதர் கோவிலில் இருந்த நந்தி மற்றும் பிள்ளையார் சிலைகளை காணவில்லை. அவை கொள்ளையடிக்கப்பட்டதா? என்பது பற்றி தெரியவில்லை. கோவில்களில் உள்ள சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. எனவே கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story