கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கர்நாடகத்தில் பயமே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது குமாரசாமி பேட்டி


கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கர்நாடகத்தில் பயமே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 21 Dec 2017 3:00 AM IST (Updated: 21 Dec 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கர்நாடகத்தில் பயமே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளதாக குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

கற்பழிப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கர்நாடகத்தில் பயமே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளதாக குமாரசாமி கூறினார்.

கூட்டு பலாத்காரம்

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

விஜயாப்புரா மாவட்டத்தில் 14 வயது ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த பள்ளி மாணவி கடத்தி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். முதல்–மந்திரி சித்தராமையா அரசு செலவில் கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்.

பயமே இல்லை என்ற நிலை

அந்த சிறுமியின் வீட்டுக்கு சென்று சித்தராமையா ஆறுதல் கூறி இருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. மக்களின் உயிர்களை விட கட்சியை பலப்படுத்துவது தான் முக்கியம் என்று சித்தராமையா கருதுகிறார். கர்நாடகத்தில் கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

கார்வார் மாவட்டம் மதக்கலவரத்தால் 10 நாட்கள் பற்றி எரிந்தது. ஒரு சம்பவத்தை வைத்து பா.ஜனதாவினர் பெரிதுபடுத்தினார்கள். இந்த மாணவியின் கொலை நடந்துள்ளது. பா.ஜனதாவினர் எங்கே போனார்கள்?. கற்பழிப்பு குற்றங்கள் கர்நாடகத்தில் தான் அதிகம் நடப்பதாக ஏற்கனவே பேசிக்கொள்கிறார்கள்.

நான் வரவேற்கிறேன்

மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வட கர்நாடக மக்கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போது கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நெருங்குவதால் பா.ஜனதாவினருக்கு திடீரென ஞானோதயம் பிறந்துள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதை நான் வரவேற்கிறேன்.

எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியை பலப்படுத்துவது பற்றி ஆலோசனை நடத்தினோம். எம்.எல்.சி.க்களுக்கு தொகுதிகளின் பொறுப்புகளை வழங்கி இருக்கிறேன். தேர்தல் வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று கூறி இருக்கிறேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story