மகதாயி நதிநீர் பிரச்சினை 23–ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு


மகதாயி நதிநீர் பிரச்சினை 23–ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2017 3:00 AM IST (Updated: 21 Dec 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

மகதாயி நதிநீர் பிரச்சினையில் கட்சிகள் நாடகமாடுவதை கண்டித்து 23–ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.

பெங்களூரு,

மகதாயி நதிநீர் பிரச்சினையில் கட்சிகள் நாடகமாடுவதை கண்டித்து 23–ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று வாட்டாள் நாகராஜ் கூறினார்.

கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கவனம் செலுத்தவில்லை

மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி வட கர்நாடக விவசாயிகள் ஒரு ஆண்டுக்கும் மேலாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். மத்திய–மாநில அரசுகள் இந்த பிரச்சினையை தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை. பிரதமர் தலையிட்டு இந்த பிரச்சினையை தீர்த்து வைத்திருக்க வேண்டும். அதை செய்ய மோடி தவறிவிட்டார்.

வட கர்நாடக மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பா.ஜனதா எம்.பி.க்கள் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதாவினர் வெறும் பொய்யை மட்டும் சொல்கிறார்கள். மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்காமல் வட கர்நாடக மக்களை பா.ஜனதாவினர் ஏமாற்றுகிறார்கள். கோவா, மராட்டிய மாநிலங்களில் பா.ஜனதா அரசு உள்ளது.

கவர்னர் மாளிகை முற்றுகை

மத்தியிலும் பா.ஜனதா அரசே இருக்கிறது. பிரச்சினையை கோர்ட்டுக்கு வெளியே தீர்த்துக்கொள்ள நடுவர் மன்றம் வாய்ப்பு வழங்கியுள்ளது. ஆயினும் பா.ஜனதாவினர் இதை செய்யாமல் காலத்தை விரயம் செய்து மக்களை ஏமாற்றிவிட்டனர். மத்திய அரசு அக்கறை செலுத்தாமல் இருப்பது, பிரதமர் இதில் தலையிடாமல் இருப்பது, கோவா, மராட்டிய மாநிலங்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வராதது, இந்த பிரச்சினையில் அனைத்து கட்சிகளும் நாடகமாடுவது ஆகியவற்றை கண்டித்து வருகிற 23–ந் தேதி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

மகதாயி நதிநீர் பிரச்சினை பற்றி பாராளுமன்ற கூட்டத்தில் எந்த கட்சியும் குரல் எழுப்பவில்லை. இந்த பிரச்சினையில் காங்கிரஸ் கூறும் கருத்து ஏற்கத்தக்கது ஆகும். ஆனால் இப்பிரச்சினையில் பா.ஜனதா அரசியல் செய்கிறது. இது சரியல்ல. கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதில் தோல்வி அடைந்துவிட்டது.

அக்கறை செலுத்தவில்லை

நமக்குரிய தண்ணீரை பயன்படுத்துவதில் இந்த அரசு அக்கறை செலுத்தவில்லை. பெங்களூரு அரண்மனை மைதானம் கன்னடர்களின் பெருமைக்குரிய இடம். அதை பாதுகாப்பதை விட்டு பெங்களூரு மாநகராட்சி அதை விற்பனை செய்யும் அளவுக்கு இறங்கக்கூடாது. இதை நான் கண்டிக்கிறேன்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.


Next Story