வடலூர் அருகே வேட்டையாடப்பட்ட கொக்குகளுடன் புகைப்படம் எடுத்து முகநூலில் வெளியிட்ட வாலிபர் கைது


வடலூர் அருகே வேட்டையாடப்பட்ட கொக்குகளுடன் புகைப்படம் எடுத்து முகநூலில் வெளியிட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 21 Dec 2017 4:00 AM IST (Updated: 21 Dec 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

வடலூர் அருகே வேட்டையாடப்பட்ட கொக்குகளுடன் புகைப்படம் எடுத்து முகநூலில் வெளியிட்ட வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கடலூர்,

டெல்லியில் உள்ள வனவிலங்கு குற்ற தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் வனவிலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது தொடர்பான குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவது, துன்புறுத்துவது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வெளியாவதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 13–ந் தேதி 2 வாலிபர்கள் ஏதோ ஒரு அணையின் ஓரம் வேட்டையாடப்பட்ட கொக்குகளை விற்பனைக்கு வைத்திருப்பது போன்றும், மேலும் அவற்றை வாயில் கடித்தபடியும், கையில் பிடித்தபடியும் பலவித கோணங்களில் நிற்பது போன்ற புகைப்படங்கள் முகநூலில் வெளியானதை வனவிலங்கு குற்ற தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் பார்த்தனர்.

விசாரணையில் அந்த புகைப்படம் கடலூர் மாவட்டத்தில் ஏதோ ஒரு அணையின் ஓரம் எடுக்கப்பட்டதும், கொக்குகளுடன் படத்தில் இருக்கும் வாலிபர்கள் தங்கள் பெயர்களை கதிரவன், ஸ்டீபன் என பதிவு செய்து இருந்ததையும் கண்டறிந்தனர். இது குறித்து கடலூர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

இதையடுத்து கொக்கு வேட்டையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி தலைமை வன அதிகாரி சேவாசிங் உத்தரவின் பேரில், மாவட்ட வன அதிகாரி சவுந்தர்ராஜன் மேற்பார்வையில், கடலூர் வனச்சரக அலுவலர் அப்துல்ஹமீது, வனவர் ராஜேந்திரன், வனக்கப்பாளர்கள் ஆதவன், பூமிநாதன் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் முகநூலில் வெளியான புகைப்படங்களை சேகரித்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் முகநூலில் வேட்டையாடப்பட்ட கொக்குகளுடன் இருந்தவர்கள் வடலூர் தோமையார் வடக்கு தெருவை சேர்ந்த மரியதாஸ் மகன் கதிரவன்(வயது 33), சுந்தர் மகன் ஸ்டீபன்(34) என்பது தெரியவந்தது.

இதையடுத்து வடலூர் அருகே உள்ள பரவனாற்று பாலம் அருகே நின்று கொண்டிருந்த கதிரவனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், நரிக்குறவர் ஒருவர் வேட்டையாடி கொண்டு வந்த கொக்குகளை சமைத்து உண்பதற்காக வாங்கியதும், பின்னர் விளையாட்டாக அந்த கொக்குகளுடன் புகைப்படம் எடுத்து முகநூலில் வெளியிட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் அவரை வனத்துறையினர் கைதுசெய்து கடலூர் 1–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கதிரவன் பிடிபட்ட தகவல் அறிந்து தலைமறைவான ஸ்டீபனையும், கொக்குகளை வேட்டியாடிய நபரையும் வனத்துறையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

முகநூலில் வெளியான புகைப்படங்களை வைத்து கடலூர் மாவட்ட வனத்துறையில் வழக்கு பதிவு செய்தது இதுவே முதல் முறை. பாம்பு வாயில் தவளை சிக்கிய கதையை போன்று கதிரவன் விளையாட்டுக்காக வேட்டையாடிய கொக்குகளுடன் புகைப்படம் எடுத்து முகநூலில் வெளியிட்டு விபரீதத்தில் சிக்கிக்கொண்டார். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story