தக்கோலம் வழியாக முரம்பு மண் எடுத்து செல்லும் லாரிகளால் பொதுமக்கள் கடும் பாதிப்பு


தக்கோலம் வழியாக முரம்பு மண் எடுத்து செல்லும் லாரிகளால் பொதுமக்கள் கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2017 4:15 AM IST (Updated: 22 Dec 2017 12:14 AM IST)
t-max-icont-min-icon

தக்கோலம் வழியாக முரம்பு மண் எடுத்து செல்லும் லாரிகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே தக்கோலம் பேரூராட்சி மற்றும் ஆத்தூர் கிராமங்களில் மண் குவாரி செயல்பட்டு வருகிறது. தினமும் இந்த குவாரிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகள் முரம்பு மண் எடுத்து சென்று வருகிறது. காலையில் இருந்து இரவு முழுவதும் லாரிகளில் மண் எடுத்து செல்லப்படுவதால் கனகம்மாசத்திரம்- தக்கோலம் சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது.

தக்கோலம் நகரில் இந்த சாலை வழியாக தினமும் அரசு மருத்துவமனை, பள்ளிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகிய பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான மக்கள், அதிகாரிகள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.

லாரிகள் வேகமாக சென்று வருவதால் சாலைகள் சேதமடைந்து தூசிகள் பறந்து வருகிறது. சாலையில் செல்லும் கால்நடைகள் அலறி அடித்து ஓடுகிறது. தூசி பறப்பதால் சுற்றுப்புறசூழல் மாசு ஏற்படுகிறது. மேலும் லாரிகள் இரவு நேரங்களில் அதிக ஒலி எழுப்புவதால் இரவில் தூங்கும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

மண் குவாரிகளில் அரசு அனுமதி அளித்து உள்ள அளவை விட பாதாள அளவிற்கு பள்ளம் தோண்டப்பட்டு மண் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.

மழைநீர் கால்வாய்கள் மூடப்பட்டதால் மழைநீர் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதை தடுக்க வலியுறுத்தி அரசு அதிகாரிகளிடம் பல்வேறு புகார் மனுக்கள் அளித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தக்கோலம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த தி.மு.க. மற்றும் தோழமை கட்சி சார்பில் ஒரு துண்டு பிரசுரம் அச்சடிக்கப்பட்டு தக்கோலம், கிராம பகுதிகளில் வெளியிட்டு உள்ளனர்.

தக்கோலம், ஆத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் மண் குவாரிகளில் அதிக அளவில் மண் எடுப்பதை தடுக்க வேண்டும், மண் எடுத்து செல்லும் லாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தக்கோலம் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்யூர் அருகே அவினாசிகண்டிகை பகுதியில் மண்குவாரிகளில் இருந்து மண் எடுத்து செல்லும் லாரிகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story