குருசாமிபாளையத்தில் பொதுமக்கள் 2-வது நாளாக சாலைமறியல்


குருசாமிபாளையத்தில் பொதுமக்கள் 2-வது நாளாக சாலைமறியல்
x
தினத்தந்தி 21 Dec 2017 10:30 PM GMT (Updated: 21 Dec 2017 7:32 PM GMT)

குருசாமிபாளையத்தில் பொதுமக்கள் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பிள்ளாநல்லூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட குருசாமிபாளையத்தில் மயானம் உள்ளது. இந்த மயானத்தில் பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பைகளை கொட்டுவதால் இறந்தவர்களின் உடலை புதைக்க இடமில்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் குப்பைகள் கொட்டப்படுவதால் மயானத்தின் அருகில் உள்ள ஆழ்துளை கிணறுகள், தனியார் கிணறுகளில் நிலத்தடி நீர் மாசுபட்டு உள்ளதாகவும், பெரிய குழிகள் வெட்டப்பட்டு அதில் குப்பைகளை போட்டு மூடிவிடுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. குப்பைகளை கொட்டுவதால் மயானத்தின் அருகாமையில் வசிக்கும் குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குப்பைகளை கொட்டக்கூடாது என்று நேற்று முன்தினம் மக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.

நேற்று 2-வது நாளாக பிள்ளாநல்லூர் பஸ்நிறுத்தம் அருகே மயானத்தின் அருகில் வசிக்கும் பெண்கள் உள்பட பொதுமக்கள் நிறம் மாறிய தண்ணீர் நிரப்பப்பட்ட பாட்டிலுடன் சாலைமறியல் செய்தனர். இதனால் ராசிபுரம்-திருச்செங்கோடு சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சம்பவ இடத்திற்கு புதுச்சத்திரம் போலீசார், பேரூராட்சி அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. 

Next Story