கொரட்டூரில் கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண்


கொரட்டூரில் கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 22 Dec 2017 4:15 AM IST (Updated: 22 Dec 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

கொரட்டூரில் கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர். கூலிப்படையை ஏவியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

அம்பத்தூர், 

சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் 200 அடி சாலையை ஒட்டி உள்ள கேனால் சாலையில் வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். கொரட்டூர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் ஜோதி நகரைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் பிரபாகர் (வயது 34) என்பது தெரியவந்தது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தைச் சேர்ந்த அவருக்கும், ஈக்காட்டுத்தாங்கல் பகுதியை சேர்ந்த உதயபாலன் என்பவரின் மனைவி உதயலேகா(36)வுக்கும் கள்ளக்காதல் இருந்தது. இதற்கு இடையூறாக இருந்த உதயபாலனை கொலை செய்த வழக் கில் பிரபாகர், உடந்தையாக இருந்த உதயலேகா இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் கடந்த 10-ந் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பிரபாகர், கொளத்தூர் ரெட்டேரியில் உள்ள அண்ணன் வீட்டில் தங்கி, சென்னை எழும்பூர் கோர்ட்டில் கையெழுத்து போட்டு வந்தார்.

உதயபாலன் கொலைக்கு பழிக்குப்பழியாக 4 பேர் பிரபாகரை போன் செய்து அழைத்துச்சென்று கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிந்தது. தனிப்படை போலீசார், கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீஸ் நிலையத்தில் சரண்

இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் ஜோதி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் (34), விருகம்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கர் (31), மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த பாலமுருகன் (24), தூத்துக்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த தாமஸ் என்ற பாண்டியன் (39) ஆகிய 4 பேர் கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர் களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரண் அடைந்த ஆறுமுகம், பாஸ்கர் இருவரும் உதயபாலன், பிரபாகர் இருவருக்கும் நெருங்கிய நண்பர்கள். நண்பரின் மனைவி என்றும் பாராமல் பிரபாகர், உதயபாலனின் மனைவி உதயலேகாவுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்தார். முதலில் இதற்கு உடன்பட மறுத்த உதயலேகாவை, பிரபாகர் மிரட்டி தனது வழிக்கு கொண்டு வந்து உள்ளார்.

கள்ளக்காதலுக்கு இடையூறு

மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடும்படி பிரபாகருடன் உதயபாலன் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவரை தீர்த்து கட்டி விட்டு நாம் இருவரும் சந்தோஷமாக வாழலாம் என்று உதயலேகாவிடம் பிரபாகர் கூறி உள்ளார். இதற்காக உதயலேகா தனது 3 குழந்தைகளுடன் காரைக்காலில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

அங்கிருந்து பிரபாகருக்கு போன் செய்து, தான் ஊருக்கு வந்து விட்டதாகவும், வீட்டில் கணவர் மட்டும் தனியாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். அதன்பிறகே பிரபாகர், உதயபாலன் வீட்டுக்கு சென்று அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து உள்ளார். பின்னர் பணத்துக்காக கொலை நடந்ததாக போலீசாரை நம்ப வைக்க அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றார்.

ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது தெரிந்தது. இதையடுத்து பிரபாகர், உதயபாலனின் மனைவி உதயலேகா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். உதயலேகா ஏற்கனவே ஜாமீனில் வெளியே வந்து குழந்தைகளுடன் காரைக்காலில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

கூலிப்படை

இந்தநிலையில் பிரபாகர் ஜாமீனில் வெளியே வந்து இருப்பதை அறிந்த உதயபாலனின் தம்பி விஜய் (35), வெளியூரில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்த பிரபாகர், தனது அண்ணியை தன்வசப்படுத்தியதுடன், தனது அண்ணனையும் கொலை செய்து விட்டானே என்ற ஆத்திரத்தில் பழிக்குப்பழியாக பிரபாகரை கொலை செய்ய முடிவு செய்தார்.

இதற்காக கூலிப்படையை சேர்ந்த பாலமுருகன், தாமஸ் ஆகியோருக்கு பணம் கொடுத்து ஏற்பாடு செய்தார். சம்பவத்தன்று பிரபாகரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசிய ஆறுமுகம், பாஸ்கர் இருவரும் அவரை கொரட்டூர் பகுதிக்கு வரவழைத்து, மது வாங்கி கொடுத்து வெட்டிக்கொலை செய்தது, சரண் அடைந்த 4 பேரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தலைமறைவாக உள்ள விஜயை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உண்மையில் இவர்கள் 4 பேரும் தான் பிரபாகரை கொலை செய்தனரா?, இவர்களுக்கு வேறு யாராவது உடந்தையாக இருந்தனரா? அல்லது வழக்கை திசை திருப்ப வேண்டும் என்பதற்காக இவர்கள் 4 பேரும் போலீசில் சரண் அடைந்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story