வரத்து அதிகரிப்பால் கோட்டைப்பட்டினம்- ஜெகதாப்பட்டினம் மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது


வரத்து அதிகரிப்பால் கோட்டைப்பட்டினம்- ஜெகதாப்பட்டினம் மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைந்தது
x
தினத்தந்தி 22 Dec 2017 4:00 AM IST (Updated: 22 Dec 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

மீன்கள் வரத்து அதிகரிப்பால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை குறைந்தது. இதில் ஒரு கிலோ சீலா மீன் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் விசைப்படகு மீன்பிடி தளங்கள் உள்ளன. இங்கிருந்து சுமார் 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மின்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2 மாத காலமாக மீனவர்களின் வலையில் குறைந்த அளவே மீன்கள் சிக்கின.

அதுமட்டுமின்றி புயல் மற்றும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தது ஆகியவற்றின் காரணமாக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க சரியாக செல்லவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளது. இந்த நிலையில் கடலோர பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக மிதமான காற்று வீசுகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக மீனவர்களின் வலையில் மீன்கள் அதிகமாக சிக்குவதால், மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து அதிகரித்து உள்ளது.

விலை குறைந்தது

இதன் காரணமாக கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை குறைந்து உள்ளது. இதில் கிலோ 400 ரூபாய்க்கு விற்ற சீலா மீன் தற்போது 300 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்ற பாறை மீன் 350 ரூபாய்க்கும், 450 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் 400 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மேலும் கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட நண்டு தற்போது 270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த மார்க்கெட்டுகள் மற்றும் மீன் பிடி தளங்களுக்கு ஏராளமான வியாபாரிகள் வந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்ற னர். இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் உள்ள மீன்பிடி தளங்கள் பரபரப்பாக காணப்படுகின்றன. மீன்கள் அதிக அளவில் சிக்கினாலும், போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

Next Story