ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க ஏற்பாடு
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்று அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வவர்மா கூறினார்.
திருச்சி,
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 29–ந்தேதி (வெள்ளிக்கிழமை) சொர்க்கவாசல் திறப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மாநகராட்சி மூலம் தற்காலிக நடமாடும் கழிவறைகள் வைக்கப்பட்டு திருவிழா காலம் முழுவதும் ஸ்ரீரங்கம் பகுதியில் சுகாதாரம் நன்கு பராமரிக்கப்படும். அவசர கால தேவைக்கு மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் சேவைக்கான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தரிசன நேரம் மற்றும் கோவில் விபரங்களை பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் 3 பிராந்திய மொழிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் ரெயில்வே முன்பதிவு மையம் அமைக்கவும், அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும், கூடுதல் இடஒதுக்கீடு செய்து தரவும் தென்னக ரெயில்வேயிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
ஆயிரங்கால் மண்டபம் முன்புறம் பிரம்மாண்டமான தகர கொட்டகை அமைக்கப்படுகிறது. நம்பெருமாள் எழுந்தருளும் போது பக்தர்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்ய தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 29–ந்தேதி சந்தன மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, பொன் கம்பம், துரை பிரகாரம், பரமபதவாசல் மற்றும் ஆயிரங்கால் மண்டபம் முன்புறம் ஆகிய பகுதிகள் பூக்களால் அலங்காரம் செய்யப்படவுள்ளது.
மொத்தத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெறவும், பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்யவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வில் கலெக்டர் ராஜாமணி, போலீஸ் துணை கமிஷனர்கள் மயில்வாகனன், சக்திகணேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி பஷீர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.