யாழ்ப்பாணம் நூலகத்துக்கு புத்தகங்கள் சேகரிப்பு கலெக்டர், பொதுமக்களுக்கு வேண்டுகோள்


யாழ்ப்பாணம் நூலகத்துக்கு புத்தகங்கள் சேகரிப்பு கலெக்டர், பொதுமக்களுக்கு வேண்டுகோள்
x
தினத்தந்தி 22 Dec 2017 8:45 PM GMT (Updated: 22 Dec 2017 7:00 PM GMT)

இலங்கை யாழ்ப்பாணம் நூலகத்துக்கு, நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புத்தகங்களை வழங்குமாறு பொதுமக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெல்லை,

இலங்கை யாழ்ப்பாணம் நூலகத்துக்கு, நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புத்தகங்களை வழங்குமாறு பொதுமக்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

யாழ்ப்பாணம் நூலகம்

இலங்கை நாட்டில் உள்ள யாழ்ப்பாணம் நூலகம் பாரம்பரியமிக்க, சரித்திர புகழ் வாய்ந்த நூலகம் ஆகும். இந்த நூலகம் தற்போது முற்றிலும் சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்த நூலகத்துக்கு, தமிழ் மொழியில் உள்ள பல்வேறு துறைகளை சேர்ந்த அரிய வகை நூல்கள், குறிப்பாக தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த புத்தகங்கள், இலக்கண இலக்கியங்கள், பண்டைய காலத்து மருத்துவ முறை சார்ந்த நூல்கள், பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் வரலாறு, ஆலயங்களின் வரலாறு பற்றிய நூல்கள், ஜோதிடம், மருத்துவ ஓலை சுவடிகள் போன்ற நூல்களை நன்கொடையாக பொது மக்கள் மற்றும் தனியார் அமைப்புகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு வருகிறது. இத்தகையை புத்தகங்களை வழங்கிட விரும்புவோர் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கிளை நூலகங்களில் வழங்கலாம்.

வேண்டுகோள்

நன்கொடையாக பெறப்படும் புத்தகங்கள் பட்டியலிடப்பட்டு, யாழ்ப்பாண நூலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்கள், தமிழ் பண்பாட்டின் அடையாளங்களை அறிந்து கொள்ளும் வகையில் நெல்லையை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய வாதிகள், படைப்பாளிகள், இலக்கிய அமைப்புகள் தங்களது படைப்புகளை பெருமளவில் தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஓலைச்சுவடிகள் போன்ற அரிய ஆவணங்கள், ஒளி அச்சு செய்யப்பட்ட பிறகு உரியவர்களிடம் திருப்பி வழங்கப்படும். இது தொடர்பான விவரங்களை நெல்லை மாவட்ட மைய நூலகர் முத்துகிருஷ்ணனை 9789710361 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்து உள்ளார்.


Next Story