மகதாயி நதிநீர் பிரச்சினை: கர்நாடக மக்களுடன் எடியூரப்பா விளையாடுகிறார் குமாரசாமி பேட்டி


மகதாயி நதிநீர் பிரச்சினை: கர்நாடக மக்களுடன் எடியூரப்பா விளையாடுகிறார் குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 22 Dec 2017 9:15 PM GMT (Updated: 22 Dec 2017 7:56 PM GMT)

மகதாயி நதிநீர் பிரச்சினையில் கர்நாடக மக்களுடன் எடியூரப்பா விளையாடுகிறார் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

மகதாயி நதிநீர் பிரச்சினையில் கர்நாடக மக்களுடன் எடியூரப்பா விளையாடுகிறார் என்று குமாரசாமி கூறினார்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

அரசியல் செய்தது இல்லை

கலசா–பண்டூரி திட்டத்திற்கு பா.ஜனதா–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததாக எடியூரப்பா கூறி இருக்கிறார். இந்த குற்றச்சாட்டு பொய்யானது. நான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. சுற்றுச்சூழல் மற்றும் சில தொழில்நுட்ப ரீதியான அனுமதி குறித்து நான் கேள்வி எழுப்பினேன்.

அப்போது பா.ஜனதாவினர், இந்த திட்டம் அமலானால் என்ன?, அமலாகாமல் போனால் என்ன?, எங்களுக்கு விளம்பரம் தேவை என்று சொன்னார்கள். இப்போது அந்த கட்சியினர் இரட்டை விளையாட்டை விளையாடுகிறார்கள். கர்நாடகத்தின் நீர், நிலம் போன்ற பிரச்சினைகளில் நான் எப்போதும் அரசியல் செய்தது இல்லை.

பா.ஜனதா நாடகமாடுகிறது

தேசிய கட்சிகளிடம் மாநில மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சாதி அடிப்படையில் ஆதரிக்கும் நிலையை மக்கள் எடுக்கக்கூடாது. மகதாயி நதிநீர் பிரச்சினையில் பா.ஜனதா நாடகமாடுகிறது. மக்களை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பிறகு முதல்–மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் கூறி இருக்கிறார். இந்த மகதாயி நதிநீர் பிரச்சினையில் கர்நாடக மக்களுடன் எடியூரப்பா விளையாடுகிறார்.

வட கர்நாடக மக்களின் ஓட்டுகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எடியூரப்பா மக்களை ஏமாற்ற முயற்சி செய்கிறார். மத்திய அரசு இந்த வி‌ஷயத்தில் எந்த கருத்தையும் கூறவில்லை. இந்த வி‌ஷயத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாநில அரசுக்கு எந்த தகவலையும் தெரிவிக்காமல், கோவா முதல்–மந்திரி மற்றும் எடியூரப்பா இடையே மட்டும் பேச்சுவார்த்தை நடக்க முயற்சி நடக்கிறது. கர்நாடகம் ஒன்றும் எடியூரப்பாவின் சொத்து கிடையாது.

குரல் கொடுக்கவில்லை

கர்நாடகத்தில் 17 எம்.பி.க்கள் இருந்தும் பிரதமருக்கு இந்த பிரச்சினை குறித்து அழுத்தம் கொடுக்கவில்லை. கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளும் இதுபற்றி பிரதமரிடம் குரல் கொடுக்கவில்லை. கடந்த 2015–ம் ஆண்டில் இருந்து கர்நாடக அரசு இந்த பிரச்சினை தொடர்பாக 15 கடிதங்கள் வரை மத்திய அரசு மற்றும் கோவா அரசுக்கு எழுதியுள்ளது. இதுவரை அதற்கு எந்த பதிலும் அவர்கள் கொடுக்கவில்லை.

காங்கிரஸ் அரசை நம்புவது இல்லை என்று கோவா முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் கூறி இருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று அவர் சொல்ல வேண்டும். நடுவர் மன்றம் அடுத்த ஆண்டு(2018) தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பேச்சுவார்த்தை எதற்கு?. நான் ஜனவரி மாதம் 5–ந் தேதி வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் தொடங்குகிறேன். 30–ந் தேதி வரை இந்த பயணம் நடைபெறும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story