விஷவாயு தாக்கி 3 வாலிபர்கள் பலி


விஷவாயு தாக்கி 3 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 23 Dec 2017 6:30 AM IST (Updated: 23 Dec 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் உள்ள தங்க நகை தயாரிப்பு தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 வாலிபர்கள் பலியானார்கள்.

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் சர்.சி.வி.ராமன் வீதியை சேர்ந்தவர் ரவிசங்கர் (வயது 50). இவர் அங்குள்ள பாதர் ராண்டி வீதியில் தங்க நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள். முதல் மாடியில் நகை தயாரிக்கும் தொழிற்சாலையும், 2-வது மாடியில் அங்கு வேலை செய்து வரும் தொழிலாளர்கள் தங்கும் அறையும் உள்ளது.

இந்த தொழிற்சாலையில் நகை தயாரிக்கும்போது அதை சுத்தப்படுத்துவதற்கு ரசாயனம் பயன்படுத்தப்படும். அப்போது அந்த ரசாயனத்துடன் சேர்ந்து தங்க துகள்கள் மற்றும் கழிவுகள் வெளியேறும். அவற்றை சேமித்து வைப்பதற்காக தொழிற்சாலையின் தரைத்தளத்தில் ஒரு ஓரத்தில் பிளாஸ்டிக் தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. 10 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட இந்த தொட்டியில் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த கழிவுநீர் தொட்டி, 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படும்.

அதன்படி கடந்த வாரத்தில் இந்த தொட்டி நிரம்பியது. இதையடுத்து அந்த தொட்டியை சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. கோவை ரத்தினபுரியை சேர்ந்த ஏழுமலை (23), கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (28), வேடப்பட்டியை சேர்ந்த கவுரிசங்கர் (23) ஆகியோர் தங்களுக்கு ரூ.7 ஆயிரம் கொடுத்தால் அந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கொடுப்பதாக தெரிவித்தனர். பணத்தை கொடுக்க ரவிசங்கர் சம்மதித்ததால், அவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு அந்த தொழிற்சாலைக்கு சென்றனர்.

இந்த தொட்டிக்குள் தேங்கி நிற்கும் கழிவுநீரில் விஷவாயு கலந்து இருக்கும் என்பதால், முதலில் கழிவுநீரை வெளியேற்றிவிட்டு, அதை திறந்து வைத்த பின்னர், அதற்குள் இறங்கி அங்கு தேங்கி நிற்கும் கழிவுகளை சலித்து அதில் இருந்து தங்க துகள்களை சேமிப்பார்கள். அதன்படி ஏழுமலை, ராதாகிருஷ்ணன், கவுரிசங்கர் ஆகியோர் நள்ளிரவு 12 மணியளவில் அந்த தொட்டியில் இருந்த கழிவுநீரை வெளியேற்றினார்கள். பிறகு தொட்டியில் இருக்கும் விஷவாயு வெளியேறுவதற்காக மூடியை திறந்து வைத்தனர்.

பின்னர் அவர்கள் அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். அதிகாலை 2 மணியளவில் ராதாகிருஷ்ணன் கழிவறை சென்றார். அப்போது ஏழுமலை, கவுரிசங்கர் ஆகியோர் தொட்டிக்குள் இருக்கும் தங்க துகள்களை சேகரிப்பதற்காக அதற்குள் இறங்கினார்கள். அப்போது திடீரென்று அவர்களை விஷவாயு தாக்கியது. இதனால் அவர்கள் அலறினார்கள்.

அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அந்த தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வரும் சூர்யகுமார் (22) என்பவர் அங்கு ஓடிவந்து, கழிவுநீர் தொட்டிக்குள் எட்டிப்பார்த்தார். அதற்குள் அவர்கள் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதனால் அவர்களை மீட்பதற்காக சூர்யகுமார் தொட்டிக்குள் இறங்கினார். அப்போது அவரையும் விஷவாயு தாக்கியதால் அவரும் மயங்கி அந்த தொட்டிக்குள்ளேயே விழுந்தார்.

கழிவறை சென்ற ராதாகிருஷ்ணன் சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது, அங்கு யாரும் இல்லை. இதனால் அவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்கிறார்களா? என்று அதற்குள் எட்டிப்பார்த்தார். அப்போது அங்கு 3 பேர் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் அந்த தொழிற்சாலையில் வேலை செய்து வரும் மற்ற ஊழியர்கள் உதவியுடன், அந்த தொட்டியை கீழே சாய்த்து, அதற்குள் மயங்கி கிடந்த 3 பேரையும் வெளியே இழுத்து போட்டார். பின்னர் அவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ஏழுமலை, கவுரிசங்கர் ஆகியோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சூர்யகுமாரை டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். எனினும் அவர் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறந்தவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், நேற்று காலையில் அந்த தொழிற்சாலை முன்பு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அத்துடன் அந்த தொழிற்சாலை உரிமையாளரான ரவிசங்கர் மீது அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை ஏற்படுத்துதல், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலைக்கு அனுமதித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் பலியான சூர்யகுமார் எம்.பி.ஏ. படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவையில் விஷவாயு தாக்கி பலியான 3 பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தனர்.

கோவையில் தங்க நகை தொழிற்சாலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியான ஏழுமலை, கவுரிசங்கர், சூர்யகுமார் ஆகியோரின் உறவினர்கள் நேற்று காலை கோவை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு கதறி அழுதனர்.

கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு இருக்கும் என்பது தெரிந்திருந்தும், அதை சுத்தம் செய்ய சென்றவர்களுக்கு போதிய உபகரணங்கள் வழங்காததால் தொழிற்சாலை உரிமையாளர் ரவிசங்கர் மீது பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் ஆபத்தான கழிவுகளை மனிதனே அள்ளக் கூடிய தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, இறந்தவர்களின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் மற்றும் ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நாங்கள் கூறிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தால்தான் நாங்கள் உடலை வாங்குவோம் என்று அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

ஏற்கனவே தொழிற்சாலை உரிமையாளர் ரவிசங்கர் மீது இருபிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சமரசம் அடைந்து, போராட்டத்தை கைவிட்டு இறந்தவர்களின் உடலை வாங்கிச்சென்றனர்.

இதற்கிடையே, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமையில் நிர்வாகிகள் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் விஷவாயு தாக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் ஹரிகரனை சந்தித்து, இந்த கோரிக்கை தொடர்பாக மனுவும் அளித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மண்டல தலைவர் சுசி கலையரசன், ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் வெண்மணி, சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு தூய்மை பணியாளர் சங்க தலைவர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story