பத்திரிகையாளரை தாக்கிய வழக்கு: ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜராக விஜயகாந்துக்கு விலக்கு
ஆலந்தூர் கோர்ட்டில் விசாரிக்கப்படும் வழக்கிற்கு நேரில் ஆஜராக விஜயகாந்துக்கு விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை,
சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வந்தார். அப்போது, பத்திரிகையாளர் எம்.பாலசுப்பிரமணியன் என்பவரை தள்ளிவிட்டு தாக்கியதாக, விஜயகாந்த் மற்றும் தே.மு.தி.க. நிர்வாகி முருகேசன் ஆகியோர் மீது மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத விஜயகாந்துக்கு, ஆலந்தூர் குற்றவியல் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. பின்னர் இந்த பிடிவாரண்டை ஐகோர்ட்டு ரத்து செய்தது.
இந்த நிலையில், ஆலந்தூர் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி விஜயகாந்தும், முருகேசனும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் வி.டி.பாலாஜி ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து, ஆலந்தூர் கோர்ட்டில் விசாரிக்கப்படும் வழக்கிற்கு நேரில் ஆஜராக விஜயகாந்த், முருகேசன் ஆகியோருக்கு விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர், இந்த மனு மீதான விசாரணையை வருகிற ஜனவரி 8-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, இந்த வழக்கில் எதிர்மனுதாரராக புகார்தாரர் பாலசுப்பிரமணியனை சேர்க்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story