ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2017 4:45 AM IST (Updated: 23 Dec 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தண்டவாளம் அருகே உள்ள வீடுகளை இடிக்க சென்ற ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

கணபதி,

கோவை ரத்தினபுரி கண்ணப்பன்நகர் வழியாக ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. இங்குள்ள சின்னராஜ்நகரில் இருக்கும் பல வீடுகள் ரெயில் தண்டவாளத்தின் அருகே உள்ளன. இதற்கிடையே பாதுகாப்பு கருதி தண்டவாளத்தில் இருந்து 100 அடி தூரத்தில் இருக்கும் வீடுகளை இடிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று எத்தனை வீடுகள் ரெயில் தண்டவாளத்தில் இருந்து 100 அடி தூரத்துக்குள் இருக்கிறது என்று கணக்கெடுத்தனர். அதில் 110 வீடுகள் 100 அடி தூரத்துக்குள் இருப்பது தெரியவந்தது. எனவே அந்த வீடுகளில் குடியிருந்து வருபவர்கள் உடனடி யாக காலி செய்யுமாறு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரெயில்வே நிர்வாகம் சார்பில் நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டது.

உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 3 மாதங் களுக்கு முன்பு கலெக்டரை சந்தித்து, தாங்கள் குடியிருந்து வரும் வீடுகளை இடிக்க உள்ளதால், மாற்று ஏற்பாடு செய்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் சிவதாஸ் தலைமையில் ஏராளமான போலீசாருடன் அங்கு சென்றனர். வீடுகளை இடிப்பதற்காக அங்கு பொக்லைன் எந்திரங்களும் கொண்டு வரப்பட்டன. இது குறித்த தகவல் பரவியதும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் சிவானந்தாகாலனி-மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதுப்பாலம் அருகே திரண்டனர்.

அவர்கள், தங்கள் பகுதியில் இருக்கும் வீடுகளை இடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி ரெயில்வே அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. மற்றும் ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர் கள் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, இடிக்கப்பட உள்ள வீடுகளில் குடியிருந்து வருபவர் களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதியளித்தார். அத்துடன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை வீடுகளை இடிக்கக் கூடாது என்று ரெயில்வே அதிகாரிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் வீடுகளை இடிக் கும் பணியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பொதுமக்களும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இது குறித்து அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘நாங்கள் இங்கு கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்துவிட்டு வீடுகளை இடித்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இருக்காது. எனவே அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். இல்லை என்றால் எங்கள் வீடுகளை இடிக்க விடமாட்டோம்’ என்றனர்.

Next Story